Friday, May 27, 2011

தோள் கொடு

இப்போதெல்லாம் தோளில் மாட்டிக்கொண்டு முதுகில் சுமையை சுமப்பது என்பது பேஷன் ஆகிவிட்டது. சீரியசாக சிலபேர், சும்மா பொழுது போக்காக சிலபேர் என்று குழந்தைகள் முதல் முதியோர் வரை இப்படி சுமையை சுமக்கிறார்கள். இவர்கள் இது தங்களுக்கு மிகவும் சௌகர்யமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு இப்படி சுமையை சுமக்கிறார்கள். இதில் ஒரே ஒரு சுகம் என்னவென்றால் கையை ஹாயாக வீசிக்கொண்டு நடக்கலாம். மற்றபடி இதில் பல தொந்தரவுகள் உள்ளன. அடுத்தவருக்கு என்று பார்த்தல் பேருந்து மற்றும் இரயிலில் செல்லும்போது கூட்ட நெரிசலில் பின்னால் நிற்கக்கூடியவருக்கு தொல்லையாக இருக்கும். மற்றபடி இதில் உள்ள தொல்லைகள் எல்லாம் சுமப்பவருக்கே. 

இரண்டு தோளிலும் சுமையை ஏற்றும்போது நரம்பு மண்டலம் அழுத்தப்பட்டு தலைக்கும் அதன் மூலம் மூளைக்கும் செல்லும் இரத்த ஓட்டம் தடை படும். நரம்பு மண்டலம் சொர்வடைவதால் உடலின் பிற பகுதிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டமும் கட்டுப்படுத்தப்படும். இதன் விளைவாக இப்படி தொடர்ந்து சுமப்பவர்கள் மிகவும் பலவீனர்களாவதுடன், சோர்வு மற்றும் சோம்பலுக்கும் ஆளாகிறார்கள். முதுகின் மீது கணிசமான அளவு பாரம் ஏற்றப்படுவதால் அதை சரி செய்ய நமது உடல் முன்னோக்கி வளைய தொடங்குகிறது. இது அருவருக்கத்தக்க கூனலை உருவாக்குகிறது. மேலும் முதுகு தண்டுவடத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் உருவாவதால் இடுப்பிலும், கால் மூட்டிலும் கூட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதுகில் பாரம் சுமப்பது கழுதை மற்றும் பிற விலங்கினங்கள்தான் என்றாலும் இந்திய மண்ணின் மைந்தர்களாகிய நாம் ஏன் இப்படி சுமக்கிறோம்? இதுவும் ஒரு அந்நிய மோகத்தினால் விளைந்த இன்னல்தான். பெரும்பாலான அந்நிய நாட்டு சுற்றுலா பயணிகள் இப்படிதான் சுமைகளை தூக்கிக்கொண்டு இந்திய மண் முழுவது சுற்றி அலைகிறார்கள். வெள்ளைக்காரன் செய்யும் அத்துணை செயல்களையும் பார்த்து காப்பி அடிக்கும் நாம் இதையும் எளிதில் ஏற்றுக்கொண்டு விட்டதால் வந்த வம்புதான் இப்படி முதுகில் பாரம் ஏற்றிவிட்டது. 

பின்பு எப்படித்தான் சுமைகளை தூக்கிச்செல்வது என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. நம் நாட்டு பாணியே தலையில் பாரத்தை தூக்குவதுதான். அதிக பாரத்தை அதிக நேரம் தாங்க வேண்டும் என்றால் மிகச்சரியான இடம் தலைதான். எளிதான பாரம் என்றால் கைகளில் ஏந்திக்கொள்ளலாம். அதுவும் இரண்டு கைகளிலும் சம பாரம் கொண்டதாக இருக்க வேண்டும். சிறிது நேரம் சற்று கூடுதலான பாரத்தை சுமக்க வேண்டும் என்றால் தோள் போதும். அதனால்தான் தோள் கொடுப்பான் தோழன் என்று சொல்கிறார்கள். ஒருவருக்கு இன்னல் வந்துற்றபோது அவருக்கு நீண்டநாட்கள் என்று இல்லாமல் சிலநாட்களுக்கு உடனே வந்து உதவும் தன்மையை தோள் கொடுத்தல் என்று சொல்வார்கள். ஒரு பாரத்தை சற்று நேரத்திற்கு சுமத்தலை இவ்வாறு சொல்லலாம். அவ்வாறில்லாமல் அந்த சுமை நீண்ட நாட்களுக்கு என்று இருந்தால் "தலையில் கட்டிவிட்டான்" என்று தலையை தான் சுட்டிக்காட்டுவார்கள். அவ்வாறு பெரும் சுமைகளை நீண்ட நேரம் நாம் தலையில்தான் சுமக்க வேண்டும். 

தலையில் சுமைகளை சுமப்பதால் பல நன்மைகள் விளைகின்றன. அவற்றை பட்டியலிடுவது என்பது மிகவும் சிரமம். தலையில் பாரம் இருக்கும்போது உடல் இயற்கையாகவே நேராக நிமிர்ந்து நிற்கும். கூன் என்பது இருக்கவே இருக்காது. தலையில் உறுத்தல் ஏற்படும்படியான சுமைகளுக்கு 'சும்மாடு' (ஒரு துணியை வட்டமாக சுருட்டி தலையில் வைத்துக்கொண்டு அதன் மீது பாரத்தை ஏற்றுவது) வைத்துக்கொள்வார்கள் அது இதமாக இருப்பதுடன் பாரம் தலை முழுவதும் பரவி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மூளையும் சோர்ந்து போகாமல் பளிச்சென்று தன் பணியை செவ்வனே செய்யும். நேராக இருக்கும் உடலுக்கு நடையும் சரியான 'ரிதத்தில்' அமைவதால் மூட்டு மற்றும் கணுக்கால் பகுதிகளில் தேய்மானம் என்பதே இல்லாமல் போகும். 

அடுத்ததாக தலையில் பாரம் சுமந்து பழக்கப்பட்டவர்கள் பாரத்துடன் கைவீசி நடப்பதை பார்க்கலாம். அவர்கள் ஆயிரம் சிந்தனையில் மூழ்கி இருந்தாலும், கூட வருபவர்களுடன் அரட்டை அடித்து வந்தாலும் அவர்களுடைய கவனமெல்லாம் தலையில் இருக்கும் பாரத்தின் மீதுதான் இருக்கும். இது மிகச்சிறந்த தியானம் என்கிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். அவர் உதாரணத்தில் தயிர் கலயத்தை தலையில் சுமந்து வரும் பெண்களை பற்றி கூறுவார். இதே தத்துவத்தில் அமைந்ததுதான் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் சுமந்து செல்லும் இருமுடியும். இருமுடியை தலையில்தான் வைத்துக்கொள்ளவேண்டும். கைகளிலேயோ அல்லது பைகளிலேயோ வைத்துக்கொள்ளக்கூடாது என்று தடை போடுவார்கள். இப்படி இருமுடியை தலையில் சுமக்கும் பக்தன், கீழே கரடு முரடான பாதையில் நடந்து சென்றாலும் அவனது மொத்த கவனமும் இருமுடி மீது ஒரு முகப்பட்டு நிற்கிறது. முதுகுத்தண்டும் நேரே நிமிர்ந்து இருப்பதால் முதுகுத்தண்டின் கீழே அமைந்துள்ள குண்டலினி சக்தி கிளம்பி மூளையை சென்று அடைவது எளிதாகிறது. ஆகவே அவர்களின் செயல்களில் தூய்மையும், முகத்தில் பொலிவும், நடையில் கம்பீரமும் இயற்கையாகவே ஏற்பட்டு விடுகிறது. எந்த பியூட்டி பார்லருக்கும் சென்று அவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளத் தேவையில்லாமல் போய்விடுகிறது. 

இப்படி நம்மிடம் இயற்கையாகவே வைத்திருக்கின்ற வசதிகளை புறக்கணித்து விட்டு மேல்நாட்டுப்பாணியை நாம் ஏற்பதால் நன்மைகளை இழந்து விடுகின்றோம். இதற்கு கண்கூடான சாட்சியங்கள் வேண்டும் என்றால், கிராமங்களில் இன்றும் தலைமீது பாரம் சுமக்கும் எண்ணற்ற மக்களின் நடையில் உள்ள கம்பீரத்தை, பல ஆண்டுகளாக நகரங்களில் தோள்களில் பாரம் சுமக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் இருக்கின்றதா என்பதை மட்டும் பாருங்கள். அப்புறம் நீங்களே புரிந்துக்கொள்வீர்கள் நம்நாட்டு பாணிக்கு இருக்கும் மேன்மையை. 

No comments:

Post a Comment