Friday, May 27, 2011

தோள் கொடு

இப்போதெல்லாம் தோளில் மாட்டிக்கொண்டு முதுகில் சுமையை சுமப்பது என்பது பேஷன் ஆகிவிட்டது. சீரியசாக சிலபேர், சும்மா பொழுது போக்காக சிலபேர் என்று குழந்தைகள் முதல் முதியோர் வரை இப்படி சுமையை சுமக்கிறார்கள். இவர்கள் இது தங்களுக்கு மிகவும் சௌகர்யமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு இப்படி சுமையை சுமக்கிறார்கள். இதில் ஒரே ஒரு சுகம் என்னவென்றால் கையை ஹாயாக வீசிக்கொண்டு நடக்கலாம். மற்றபடி இதில் பல தொந்தரவுகள் உள்ளன. அடுத்தவருக்கு என்று பார்த்தல் பேருந்து மற்றும் இரயிலில் செல்லும்போது கூட்ட நெரிசலில் பின்னால் நிற்கக்கூடியவருக்கு தொல்லையாக இருக்கும். மற்றபடி இதில் உள்ள தொல்லைகள் எல்லாம் சுமப்பவருக்கே. 

இரண்டு தோளிலும் சுமையை ஏற்றும்போது நரம்பு மண்டலம் அழுத்தப்பட்டு தலைக்கும் அதன் மூலம் மூளைக்கும் செல்லும் இரத்த ஓட்டம் தடை படும். நரம்பு மண்டலம் சொர்வடைவதால் உடலின் பிற பகுதிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டமும் கட்டுப்படுத்தப்படும். இதன் விளைவாக இப்படி தொடர்ந்து சுமப்பவர்கள் மிகவும் பலவீனர்களாவதுடன், சோர்வு மற்றும் சோம்பலுக்கும் ஆளாகிறார்கள். முதுகின் மீது கணிசமான அளவு பாரம் ஏற்றப்படுவதால் அதை சரி செய்ய நமது உடல் முன்னோக்கி வளைய தொடங்குகிறது. இது அருவருக்கத்தக்க கூனலை உருவாக்குகிறது. மேலும் முதுகு தண்டுவடத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் உருவாவதால் இடுப்பிலும், கால் மூட்டிலும் கூட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதுகில் பாரம் சுமப்பது கழுதை மற்றும் பிற விலங்கினங்கள்தான் என்றாலும் இந்திய மண்ணின் மைந்தர்களாகிய நாம் ஏன் இப்படி சுமக்கிறோம்? இதுவும் ஒரு அந்நிய மோகத்தினால் விளைந்த இன்னல்தான். பெரும்பாலான அந்நிய நாட்டு சுற்றுலா பயணிகள் இப்படிதான் சுமைகளை தூக்கிக்கொண்டு இந்திய மண் முழுவது சுற்றி அலைகிறார்கள். வெள்ளைக்காரன் செய்யும் அத்துணை செயல்களையும் பார்த்து காப்பி அடிக்கும் நாம் இதையும் எளிதில் ஏற்றுக்கொண்டு விட்டதால் வந்த வம்புதான் இப்படி முதுகில் பாரம் ஏற்றிவிட்டது. 

பின்பு எப்படித்தான் சுமைகளை தூக்கிச்செல்வது என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. நம் நாட்டு பாணியே தலையில் பாரத்தை தூக்குவதுதான். அதிக பாரத்தை அதிக நேரம் தாங்க வேண்டும் என்றால் மிகச்சரியான இடம் தலைதான். எளிதான பாரம் என்றால் கைகளில் ஏந்திக்கொள்ளலாம். அதுவும் இரண்டு கைகளிலும் சம பாரம் கொண்டதாக இருக்க வேண்டும். சிறிது நேரம் சற்று கூடுதலான பாரத்தை சுமக்க வேண்டும் என்றால் தோள் போதும். அதனால்தான் தோள் கொடுப்பான் தோழன் என்று சொல்கிறார்கள். ஒருவருக்கு இன்னல் வந்துற்றபோது அவருக்கு நீண்டநாட்கள் என்று இல்லாமல் சிலநாட்களுக்கு உடனே வந்து உதவும் தன்மையை தோள் கொடுத்தல் என்று சொல்வார்கள். ஒரு பாரத்தை சற்று நேரத்திற்கு சுமத்தலை இவ்வாறு சொல்லலாம். அவ்வாறில்லாமல் அந்த சுமை நீண்ட நாட்களுக்கு என்று இருந்தால் "தலையில் கட்டிவிட்டான்" என்று தலையை தான் சுட்டிக்காட்டுவார்கள். அவ்வாறு பெரும் சுமைகளை நீண்ட நேரம் நாம் தலையில்தான் சுமக்க வேண்டும். 

தலையில் சுமைகளை சுமப்பதால் பல நன்மைகள் விளைகின்றன. அவற்றை பட்டியலிடுவது என்பது மிகவும் சிரமம். தலையில் பாரம் இருக்கும்போது உடல் இயற்கையாகவே நேராக நிமிர்ந்து நிற்கும். கூன் என்பது இருக்கவே இருக்காது. தலையில் உறுத்தல் ஏற்படும்படியான சுமைகளுக்கு 'சும்மாடு' (ஒரு துணியை வட்டமாக சுருட்டி தலையில் வைத்துக்கொண்டு அதன் மீது பாரத்தை ஏற்றுவது) வைத்துக்கொள்வார்கள் அது இதமாக இருப்பதுடன் பாரம் தலை முழுவதும் பரவி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மூளையும் சோர்ந்து போகாமல் பளிச்சென்று தன் பணியை செவ்வனே செய்யும். நேராக இருக்கும் உடலுக்கு நடையும் சரியான 'ரிதத்தில்' அமைவதால் மூட்டு மற்றும் கணுக்கால் பகுதிகளில் தேய்மானம் என்பதே இல்லாமல் போகும். 

அடுத்ததாக தலையில் பாரம் சுமந்து பழக்கப்பட்டவர்கள் பாரத்துடன் கைவீசி நடப்பதை பார்க்கலாம். அவர்கள் ஆயிரம் சிந்தனையில் மூழ்கி இருந்தாலும், கூட வருபவர்களுடன் அரட்டை அடித்து வந்தாலும் அவர்களுடைய கவனமெல்லாம் தலையில் இருக்கும் பாரத்தின் மீதுதான் இருக்கும். இது மிகச்சிறந்த தியானம் என்கிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். அவர் உதாரணத்தில் தயிர் கலயத்தை தலையில் சுமந்து வரும் பெண்களை பற்றி கூறுவார். இதே தத்துவத்தில் அமைந்ததுதான் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் சுமந்து செல்லும் இருமுடியும். இருமுடியை தலையில்தான் வைத்துக்கொள்ளவேண்டும். கைகளிலேயோ அல்லது பைகளிலேயோ வைத்துக்கொள்ளக்கூடாது என்று தடை போடுவார்கள். இப்படி இருமுடியை தலையில் சுமக்கும் பக்தன், கீழே கரடு முரடான பாதையில் நடந்து சென்றாலும் அவனது மொத்த கவனமும் இருமுடி மீது ஒரு முகப்பட்டு நிற்கிறது. முதுகுத்தண்டும் நேரே நிமிர்ந்து இருப்பதால் முதுகுத்தண்டின் கீழே அமைந்துள்ள குண்டலினி சக்தி கிளம்பி மூளையை சென்று அடைவது எளிதாகிறது. ஆகவே அவர்களின் செயல்களில் தூய்மையும், முகத்தில் பொலிவும், நடையில் கம்பீரமும் இயற்கையாகவே ஏற்பட்டு விடுகிறது. எந்த பியூட்டி பார்லருக்கும் சென்று அவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளத் தேவையில்லாமல் போய்விடுகிறது. 

இப்படி நம்மிடம் இயற்கையாகவே வைத்திருக்கின்ற வசதிகளை புறக்கணித்து விட்டு மேல்நாட்டுப்பாணியை நாம் ஏற்பதால் நன்மைகளை இழந்து விடுகின்றோம். இதற்கு கண்கூடான சாட்சியங்கள் வேண்டும் என்றால், கிராமங்களில் இன்றும் தலைமீது பாரம் சுமக்கும் எண்ணற்ற மக்களின் நடையில் உள்ள கம்பீரத்தை, பல ஆண்டுகளாக நகரங்களில் தோள்களில் பாரம் சுமக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் இருக்கின்றதா என்பதை மட்டும் பாருங்கள். அப்புறம் நீங்களே புரிந்துக்கொள்வீர்கள் நம்நாட்டு பாணிக்கு இருக்கும் மேன்மையை. 

Thursday, May 19, 2011

வெயில்

வெயில்ல போகாதே! கருத்துப்போயிடுவே! வியர்குறு வரும்! இப்படியெல்லாம் சொல்லி சொல்லியே நம்ம பசங்களை வெளியிலே அனுப்பமாட்டாங்க. போதா குறைக்கு இப்ப அடுக்கு மாடி வீடு வேற வந்துடுச்சா! அதுங்க மேல வெயிலே படாது. அதனால நம்ம பசங்க எவ்வளவு இழக்கறாங்க தெரியுமா! பல நோய்களுக்கு ஆளாகறாங்க. எதிர்ப்பு சக்தி குறைந்து போகுது. சோம்பேறித்தனம் பெருகி போகிறது. 

நம்ம நாடு வெயில் வளம் நிறைந்த நாடு. மற்ற பல நாடுகளுக்கு கிடைக்கப்பெறாத ஒரு அறிய வளம் இது. வெயில் ஆண்டுதோறும் இருக்கும் ஒரு சில நாடுகளில் நம் நாட்டின் பெயரும் வந்து விடுகிறது. சில நாடுகளில் மாதக்கணக்கில் கூட வெயிலை பார்க்க முடியாது. அப்படிப்பட்ட சிறப்பு நம் நாட்டில் இருப்பதால் நாம் அந்த வளத்தை தக்க முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் நவீன காலங்களில் நாம் இந்த வளத்தை அலட்சியப்படுத்துவதில்லாமல் அதை கேவலப்படுத்தவும் முனைகிறோம். பொதுவாக கருப்பாக இருக்கும் மனிதர்கள் வெளுப்பாக இருப்பவர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாக இருப்பார்கள். இந்த பொது உண்மையை கூட நாம் புரிந்துக்கொள்ள தவறிவிட்டோம். 
வெயிலின் சிறப்புகளை பற்றி கூற முற்பட்டால் அது நீண்டுகொண்டே போகும். வெயில் ஒரு சிறந்த கிருமி நாசினி. நம் நாட்டில் இயற்கையாகவே துணிகளை வெயிலில் காயவைக்கும் பழக்கம் உண்டு. அது துணிகளில் படிந்துள்ள கிருமிகளை கொள்வதால் படை, தேமல், போன்ற பல வியாதிகளை பரப்பும் கிருமிகள் அழிகின்றன. நவீன காலமாக நாம் வாசிங் மிஷினில் துணி துவைத்து அப்படியே நிழலில் காயப்போடுகிறோம். அதனால் துணிகள் வெளுத்தாலும் அதில் உள்ள கிருமிகள் சாவதில்லை. தொடர்ந்து அவை நோயை பரப்புகின்றன. 

உலகிலேயே தானியங்களை பாதுகாக்க வெயிலை அதிக அளவில் பயன் படுத்தும் நாடு நம் நாடுதான். அறுவடை செய்த எந்த ஒரு தானியம் அல்லது பருப்பு வகை ஆகட்டும் அவற்றை நாம் வெயிலில் காய வைத்துதான் பாது காக்கிறோம். அப்படி செய்யும் பொழுது அந்த தானியங்களில் உள்ள அதிகப்படியான ஈரம் வெளியேறி அழுகாத தன்மையை அந்த தானியங்களுக்கு அளிக்கின்றது. வீணாக போகும் வெயிலை சேமித்து மின்சாரங்கள் பெறப்படுகின்றன. மின் தேவை அதிகம் இருக்கும் இக்காலங்களில் வெயில் மின்சாரம் நமக்கு ஒரு அரிய வாய்ப்பு. 

வெயிலில் வைட்டமின் K என்ற ஒரு அறிய பொருள் கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்பு தன்மையை கூட்டுகிறது. உடலில் பாக்டீரியாக்கள் தேங்கி தீங்கு இழைக்கதவண்ணம் தடுக்கிறது. வெயில் படும் இடங்களில் சொறி சிரங்கு போன்ற நோய்கள் தோன்றுவதும் தடுக்கப்படுகிறது. வெயிலில் அதிகமாக சுற்றும்போது கண்கள் இயற்கையாகவே அதிக ஒளியை சந்திதக்க வேண்டியிருக்கும். இதனால் கண்களின் பார்வை திறன் கூடுவதுடன் சிறு வயதிலேயே பார்வைக் கோளாறுகள் வருவது தவிர்க்கப்படும். 

நம் தோலில் மெலனின் என்ற ஒரு வகை என்சைம் உற்பத்தி ஆகிறது. அது வெயில் பட்ட உடனே கருப்புதன்மை அடைகிறது. ஆகவேதான் வெயிலில் அதிகமாக சுற்றுபவர்கள் கருப்பாக இருக்கிறார்கள். இது இயற்கை தந்த ஒரு வரம். வெயிலின் அதிகப்படியான தாக்கம் நம் உடலுக்கு தீங்கு இழைக்காத வண்ணம் அது காக்கிறது.  

நாம் வெயிலின் ஒளி நம் மீது படாமல் இருக்க பலவை கிரீம்கள், பவுடர்கள், லோசங்கள் என்று பலவற்றை பூசிக்கொள்கிறோம். இவற்றால் எந்த பயனும் இல்லை என்பது நமக்கு புரியும் முன்னர் நமக்கு வயதாகி விடும். இவை நமக்கு பண விரயத்தை தருவதோடு இயற்கையாக வெயிலினால் நமக்கு கிடைக்கும் பல அரிய நன்மைகளை தடுத்து விடுகின்றன. வெயிலின் மூலம் நம் உடல் பெரும் எதிர்ப்பு திறனை இவை குறைத்து விடுகின்றன. வெயிலினால் நமக்கு கிடைக்கும் அரிய வைட்டமினையும் இவை தடுத்து விடுகின்றன. இவற்றை பூசுவதால் வியர்வை துவாரங்கள் அடைபட்டு வெளியில் வராமல் போகும். இதனால் நம் உடலுக்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது.  காசை கொடுத்து கலியை வாங்கி கொள்வது போன்றது. 

வெயிலில் வெளியே போகாமல் இருப்பதால் உடலுக்கு சோர்வு ஏற்படுகிறது. சுறுசுறுப்பு குறைகிறது. முகத்தின் பொலிவு போய் விடுகிறது. முன்பெல்லாம் கைக்குழந்தைகளை காலை வெயிலில் சில நேரங்கள் காட்டுவார்கள். அவர்கள் முகங்களை கௌமியம் (பசுவின் சிறுநீர்) கொண்டு கழுவுவார்கள். இதனால் முகத்தின் சோம்பல் தீரும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதையெல்லாம் நாம் தொலைத்து விட்டோம். 

நாம் ஒவ்வொருவரும் வெயிலில் உலா போவதை வாடிக்கையாக கொள்ளவேண்டும். காலையிலோ, மாலையிலோ வெயில் நம் மேனியில் படும் வண்ணம் வெளியில் உலவ வேண்டும். வீட்டிலேயோ அல்லது அலுவலகங்களிலேயோ அடைபட்டு கிடப்பதை தவிர்க்க வேண்டும். மதிய வெயிலின் வெப்பம் அதிகம் என்பதால் அதை தவிர்க்கலாம். மாலை வெயில் முற்றிலும் நல்லது. குழந்தைகளை படி படி என்று தொல்லை செய்வதை விட கட்டாயம் மாலைப்பொழுதில் வெயிலில் மற்ற குழந்தைகளோடு கலந்து விளையாட பழக்க வேண்டும். அவர்களுக்கு விளையாட்டுடன் அரிய பொக்கிஷமாக வெயிலின் சக்தி கிடைக்கிறது. வெயிலையே பார்க்காமல் இருப்போர் A.C. அறையில் அடைபட்டு கிடக்க கூடாது. அவர்கள் வெயில் படும்படி வெளியில் செல்வதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். 

சிறு வயதிலிருந்து நம் குழந்தைகளை A.C., Fan, போன்றவற்றிற்கு பழக்க கூடாது. அவர்கள் இயற்கையோடு ஒன்றி வளர பழக்க வேண்டும். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதோடு, வாழ்வில் எத்தகைய கால நிலைகளிலும் இயல்பாக வாழும் மனோதைரியமும் கிடைத்து விடுகிறது. இதையெல்லாம் உணர்ந்ததால்தான் நம் பெரியவர்கள் சூரிய நமஸ்காரம் என்ற ஒன்றை வைத்திருக்கிறார்கள். சூரியனை நேரே பார்ப்பது. குனிந்து எழுந்து வணக்கம் செய்வது. என்று பல பயிற்சிகளை உள்ளடக்கிய சூரிய நமஸ்காரம் வெளியில் வெயில் படும்படி செய்ய வேண்டிய ஒரு கடமை. நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நிறைவை தரும் ஒரு பயிற்சி. இத்தகைய சிறப்புகளை உள்ளடக்கிய வெயிலை நாம் உதாசீனப்படுத்தாமல் நம் பிள்ளைகளை வெயிலில் உலவ விட்டு மிகப்பெரிய பயன்களை பெற வேண்டுகிறோம். 

Saturday, May 14, 2011

தலைவலி

பெரும்பாலானோர் அவதிக்கு உள்ளாவது தலைவலியினால்தான். ஒரு விஷயத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கும்பொழுதும் நாம் அதை தலைவலி என்றுதான் சொல்கிறோம். அனால் அந்த தலைவலியை பற்றி நாம் பேசப்போவதில்லை. அத்தகைய தலைவலியையும் உள்ளடக்கிய நிஜ தலைவலியை பற்றிதான் இங்கே விவாதிக்க இருக்கிறோம். 

தலைவலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். தூக்கமின்மையினால் தலைவலி வரலாம். வெயிலில் அதிகமாக சுற்றினாலும் தலைவலி வரலாம். நமக்கு பிடிக்காத சில விஷயங்களை கேட்க வேண்டி வந்தாலும் அத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டி வந்தாலும் தலைவலி வரலாம். ஒரு சிலருக்கு கண்ணில் கோளாறு இருந்தாலும் தலைவலி வரும். ஒரு சிலருக்கு "மைக்ரேன்கள்" என்ற வகை தலைவலியும் வரும். பல்லில் வலி இருந்தாலும் தலைவலி வரும். புகை, தூசு போன்றவை அதிகம் நுகர வேண்டியிருந்தாலும் தலைவலி வரும். அதிக வெளிச்சத்தை கண்கள் சந்திக்கவேண்டியிருந்தாலும் தலைவலி வரும். சரியான தலையணை இல்லாமலோ அல்லது தவறான தலையனையுடனோ அல்லது ஏடாகூடமாக படுத்ததினாலோ கூட தலைவலி வரும். இப்படி தலைவலி வர பல காரணங்கள் உள்ளன.தலைவலிகள் ஒற்றைத்தலைவலி, இரட்டைத்தலைவலி, என்று அவை பலவகைகளிலும் வரும். 

பெரும்பாலானோர் தைலங்களை தேய்த்துக்கொள்ளுவார்கள். சிலர் மருத்துவரின் அறிவுரையில்லாமலேயே மாத்திரை மருந்துகளை உட்கொள்ளுவார்கள். சிலர் வெளியில் தூய காற்றில் உலாவுவார்கள். சிலர் குளிர்ந்த தண்ணீரை குடிப்பார்கள். இவை அப்போதைக்கு தற்காலிக விடுதலை கொடுத்ததாக அமையுமே அன்றி முற்றிலும் தலைவலியை நீக்கி விடாது. மீண்டும் தலைவலி குடைச்சல் கொடுத்துக்கொண்டேயிருக்கும். தலைவலி மிகுதியால் அவதிப்படுவோர் மிக அதிகம். ஒரு சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் உள்ளன. 

தலைவலியை கவனியாது விட்டுவிட்டால் அது நம்முடைய செயல்பாடுகளில் தொய்வை உண்டாக்கிவிடும். பிறர் மீது எரிச்சலை ஏற்படுத்தும். நட்பு வட்டாரத்தை சுருக்கிவிடும். முகத்தில் வாட்டத்தை உண்டாக்கி அழகை கெடுத்துவிடும். உம்மனாமூஞ்சி, சிடுமூஞ்சி என்று பிறர் பேசும்படி செய்து விடும். தலைவலியை போக்கிக்கொள்ள நாம் அதிதீவிரமாக முயலவேண்டும். 

முதற்கண் நமக்கு ஏன் தலைவலி வருகிறது என்ற காரணத்தை நாம் தனிமையில் அமர்ந்து கவனிக்கவேண்டும். மருத்துவரிடம் சென்று மருந்தை வாங்கி உட்கொள்ளுமுன் நாமே நம் தலைவலிக்கான காரணத்தை அராய்ந்தோமானால் நாமே மருந்துகளில் துணையின்றியே தலைவலியை போக்கிவிட முடியும். இன்றைய பொழுது நாம் எத்தகைய பணியை செய்தோம். காலை முதல் மாலை வரை நம்முடைய ஆரோக்கிய நிலை எப்படி இருந்தது. தலைவலி இல்லாமல் இருந்த நிலை எப்பொழுது, எத்தகைய செயலை செய்த பொது வந்தது என்று ஆராய்ந்தால் தலைவலிக்கான காரணத்தை கண்டுபிடித்துவிடலாம். அடுத்த நாள் முதல் தலைவலியை ஏற்படுத்தும் அத்தகைய செயலை தவிர்ப்பதன் மூலம் தலைவலியை போக்கி விடலாம். 

அனால் அத்தகைய செயல்கள்தான் நமக்கு இயல்பானது அல்லது வாழ்வாதாரத்துடன் கலந்தது எனும் பொழுது அதை எப்படி தவிர்ப்பது. அதாவது வெயிலில் போகாமல் இருக்க முடியாது, அதிக வெளிச்சத்தை பாராமல் இருக்க முடியாது, மிக அதிக இரைச்சல், புகை மண்டலத்தில் நடமாடாமல் இருக்க முடியாது என்று பல முடியாதுகள் நம்முடைய வாழ்வில் கட்டாயம் எனும் பொழுது நாம் வெறுமனே அவற்றை தவிர்க்க முடியாது. பின்பு எப்படித்தான் தலைவலியிலிருந்து நாம் விடுபடுவது. 

அதற்கு மிக எளிதான ஒரு வழியை இங்கே கூறுகிறோம். அதை கடைபிடித்தல் எளிது. அனால் அதற்கு தேவை விடா முயற்சி மட்டுமே. மிகச்சிறந்த பயிற்சியோ, மருந்தோ இன்றி நீங்கள் செய்யும் அனைத்து இயல்பான பணிகளை தவிர்க்காமல் எளிதில் கையாளும் வண்ணம் ஒரு உபாயத்தைத்தான் இங்கே கூறப்போகிறோம். முயன்று பாருங்கள். பயனடைந்தோர் பிறரிடம் கூறுங்கள். 

நம்முடைய மூளை நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட, நாம் கேட்காவிட்டாலும் கூட, அது தன்னிச்சையாக பல ஒலிகளை தன்னகத்தே பதிவு செய்கிறது. இத்தகைய ஒலிகள் மற்றும் பதிவுகள் நம்முடைய மூலையில் ஒரு பெருக்கத்தை உண்டாக்குகின்றன. எப்படி நம்முடைய வீட்டில் தேவையற்ற பொருட்கள் குவிவதால் அலமாரிகள் மற்றும் அறைகளால் அவை நிரம்பி காணப்படுகின்றனவோ அவ்வாறே இத்தகைய தேவையற்ற பதிவுகளால் மூளை பெருக்கமடைந்து நமக்கு தேவைப்படும் பதிவுகளை ஏற்க மறுக்கிறது. உதாரணமாக நீங்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்களோ பாடத்தைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அங்கே தற்செயலாக ஏற்படும் ஒலிகளை பற்றி எந்த ஈர்ப்புமிருக்காது. ஆசிரியர் கூறுவது மட்டுமே கவனமாக இருக்கும். அனால் அங்கே ஆசிரியர் ஏற்படுத்தும் ஒலியலைகளை தவிர பல்வேறு ஒலியலைகள் உலாவிக்கொண்டிருக்கின்றன. அவற்றை நீங்கள் அறிய மாட்டீர்கள். அங்கே அருகில் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தோ, லாரியோ ஏற்படுத்தும் ஒலிகள், அவ்வழியாக செல்வோர் ஏற்படுத்தும் ஒலிகள், தற்சயலாக ஆசிரியர் தவறவிட்ட சாக்கின் ஒலி, பின் சீட்டில் இருந்த ஒருமாணவன் பையை திறக்கும் ஒலி, அவன் மேசையை அசைத்த ஒலி, என்று நம்மால் கவனிக்க மறந்த பல ஒலிகள் நம்முடைய அனுமதியின்றியே நம்முடைய மூளையில் பதிவாகிறது. இவற்றை நாம் அறியவில்லை. வகுப்பறையில் ஆசிரியர் ஏற்படுத்திய ஒளியை தவிர மற்றபடி அமைதி இருந்ததாகத்தான் நாம் நினைத்துக்கொண்டிருப்போம். இப்படி நம்மையுமறியாமல் பதிவான ஒலிகள் மேலும் நாம் நமக்கு வேண்டிய கருத்துக்களை கவனித்து பதிவு செய்ய வேண்டி வரும்பொழுது அவற்றிற்கு இடம் கொடாது. நாம் கட்டாய பதிவுக்கு முற்படும்போது மூளையின் பகுதி பெருக்கமடைந்து அவற்றிக்கு இடம் கொடுக்கிறது. அப்பொழுதுதான் நமக்கு தலைவலி ஆரம்பிக்கிறது. தலைவலியை மட்டும் அவை ஏற்படுத்துவதில்லை நமக்கு புதிய பதிவுகளை தடுப்பதன் மூலம் அவை "நினைவுத்திறனையும்" குறைத்து மறதிக்கு வழிவகுக்கின்றன. தலைவலி மெல்ல அதிகமாகி பிறகு நம்மை பெரும் பாடு படுத்துகின்றது. நீங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் ஒரு மருந்தையோ அல்லது வேறு உபாயத்தையோ கையாளும்போழுது அவற்றிலிருந்து விடுபட்டதாக உணர்கிறீர்கள். மறுபடியும் மறுநாள் அவ்வாறே தலைவலி உருவாகிறது. இத்தகைய நிலையை முற்றிலுமாக போக்க வேண்டியது நம்முடைய கடமையாகிறது. இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள உபாயத்தை கையாண்டு பாருங்கள். 

நீங்கள் இரவில் அனைத்து செயல்களையும் முடித்துவிட்டு படுத்துக்கொள்ளுங்கள். ஒருபுறமாக ஒருக்களித்துப்படுத்துக்கொள்ளுங்கள். வலது புறமாயின் நல்லது. இப்போது உங்களது வலது காது தலையணையில் நன்கு பதிந்து இருக்கட்டும். இடது கையை தலைக்கு மேலே நன்கு நீட்டி உயர்த்தி படுத்துக்கொள்ளுங்கள். இடது தோள் பகுதி இடது காதின் மீது பட்டு அதை நன்கு மூடியிருக்கவேண்டும். இப்பொழுது உங்களுக்கு அங்கே வெளியில் ஏற்படும் ஒலிகள் எதுவும் கேட்காது. நீங்கள் எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காதீர்கள். அவ்வாறு சிந்தனைகள் ஏற்பட்டாலும் கட்டாயமாக தவிருங்கள். இப்பொழுது உங்கள் மனதிலிருந்து ஏற்படும் ஒலியதிர்வுகளை கவனியுங்கள். அவை உங்களுக்கே மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தும். அவை பலவிதமாக இருக்கும். எப்பொழுதோ பேருந்தில் சென்றது, எங்கேயோ மார்க்கெட்டில் யாரோ கூச்சல் போட்டது. ஏதோ இரு விசேஷத்தில் பாட்டுகச்சேரியை கேட்டது, சிறுவயதில் வகுப்பறையில் சத்தம் போட்டது என்று பலவித ஒலிகள் கேட்கும். இவற்றில் விசேஷம் என்ன என்றால் நீங்கள் அறிந்திராத மொழிகளிலும் கூட அத்தகைய ஒலிகள் இருக்கும். அவற்றை நீங்கள் கண்டும் காணாதது போலிருந்தால் அந்த ஒலியின் அளவு அதிகமாகிக்கொண்டே வரும். அவற்றை கூர்ந்து கவனிக்க முற்படும்போது அந்த ஒலிகள் நின்றுவிடும். மீண்டும் நீங்கள் அமைதியாக இருக்கும் பொழுது அது கேட்க தொடங்கும். இவ்வாறு நீங்கள் கவனிப்பது, அவை நிற்பது என்று நடக்கும்போழுதே நீங்கள் தூங்கிப்போவீர்கள். காலையில் எழுந்திருக்கும் பொழுது நன்கு தூங்கியதாக உணர்வீர்கள். இத்தகைய பயிற்சியை நீங்கள் ஒருநாள் இரண்டுநாள் என்று விட்டுவிடாமல் பலநாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் தலைவலியிலிருந்து பூரண குணம் பெறுவதோடு மறதியிலிருந்தும் முற்றிலும் விடுபடலாம். பலநாட்களுக்குப்பிறகு இத்தகைய ஒலிகள் எழுவது நின்று போகும். அத்தகைய நிலையில் தலைவலி உங்களிடமிருந்து விடை பெற்றது என்றே அர்த்தம்.  

பிறகு நீங்கள் இதற்கு முன்பு எத்தகைய செயல்களில் ஈடுபட்டால் தலைவலி வந்ததோ அத்தகைய செயல்களில் ஈடுபட்டாலும் தலைவலி என்பது வரவே வராது. பயிற்சியை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள். மருந்தோ வேறு எந்த உபாயங்களோ இல்லாமல் மிகுந்த பயனை தரவல்லது.