Monday, September 12, 2011

பிராணனுக்கு நீர் மிக அவசியம்!

சமீபத்தில் திருப்பதி சென்றிருந்தேன். மலையேறி செல்லுகையில் ஒரு சிறுமி, சுமார் 10 வயதிருக்கும், தமது தந்தையாரிடம் தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டாள். அந்த தந்தையார், இப்பொழுது வியர்த்து கொட்டுகிறது, வியர்வை வருவது நிற்கின்றபோதுதான் தண்ணீர் குடிக்க வேண்டும், தொடர்ந்து நட! என்று அழைத்து சென்றார். இதை கேட்ட எனக்கு என்னவோ போலாகிவிட்டது. குழந்தை தண்ணீர் தாகம் என்று கேட்டும் தண்ணீர் தர மறுத்தது மற்றும் வியர்வை வருவது நின்றபிறகுதான் குடிக்க வேண்டும் என்று தீர்மானித்தது இரண்டும் தவறு.

இப்படி வியர்வை சிந்த பணி செய்கிறவர்கள் தாகமேடுக்கும்போது தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும். வியர்வை சிந்துவது நின்றபிறகு குடிக்கலாமென்பது நீர் வெளியேற்றத்தில் (dehydration) கொண்டுபோய் விடும். மூச்சு வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது தண்ணீர் குடிக்க கூடாது. ஓரிரு நிமிடங்கள் ஆசுவாச படுத்துக்கொண்டு மூச்சு பழையபடிக்கு நிலையாக வந்தபின்பு குடிப்பது நலம். இல்லையென்றால் மூச்சுக்குழலில் நீர் செல்லும் ஆபத்து உண்டாகும். 

நம்முடைய உடலுக்கு என்ன தேவை என்பதை இயற்கை தானாகவே கவனித்துக்கொள்ளும். நாம் அதி சிறந்த மேதாவி தனத்தை அங்கே காட்ட வேண்டியது இல்லை. தண்ணீர் தேவை என்றால் தாகமெடுக்கும், உணவு தேவைக்கு பசியெடுக்கும், மூச்சுக்குழல் அடைப்பை போக்க தும்மல் வரும், கண்ணில் விழுந்து விட்ட புறப்பொருட்களை போக்க கண்ணீர் வரும், உணவில் கலந்துவிட்ட விஷத்தை வெளியேற்ற வாந்தி வரும். இது போன்ற எண்ணற்ற செயல்களை அதுதானாகவே தீர்மானித்துக்கொள்ளும். நாம் சுத்தமான பொருட்களை அதற்கு தயாரித்து கொடுத்தால் போதுமானது. தூய தண்ணீர் தாகமெடுக்கும்போதெல்லாம்  தந்தால் போதும். ஒருசிலர் கூறுவது போல் ஒருநாளைக்கு இத்தனை லிட்டர் என்று எந்த ஒரு கணக்கும் இல்லை. தவிர, தண்ணீர் அமிலத்தன்மை கொண்டது. உடல் வேண்டாத பொழுது, அதாவது தாகமில்லாத பொழுது, தண்ணீர் தருவது தீமையில் முடியும். விரைவில் உணவு செரித்துவிடும், அமிலத்தன்மை அதிகமாவதால் வாயுத்தொல்லை ஏற்படும், உடலில் உள்ள உப்புக்களை உடனடியாக வெளியேற்றி உடலுக்கு உரிய வலிமையை குறைத்துவிடும். இது போன்ற எண்ணற்ற விளைவுகளை வேண்டாத நீர் கொடுத்துவிடும்.

அதிக வேலையோ, மலை அல்லது மாடிகளில் ஏறுவதோ செய்யும்போது மூச்சுக்காற்று அதிகம் வாங்கும். இந்த உஷ்ண காற்று படுவதால் தொண்டை வறண்டு விடும். இதை தவிர்க்க ஈரப்பதம் ஏற்படுமளவிற்கு நீரை உட்கொள்ளலாம். மற்றபடி தாகமின்றி நீரை உட்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். நாமனைவரும் உணவு உட்கொள்ளும் சமயங்களில் நீரை அதிகம் அருந்துவோம். இதுவும் தவறு. ஆரம்பத்தில் ஒரு விழுங்கு, கடைசியில் ஓரிரு விழுங்குகள் இடையிடையே அடைப்பை போக்க சிறிது என்று நீரை குறைவாக உட்கொள்ள வேண்டும். உணவு உண்டு முடித்த ஒரு மணிநேரம் கழித்து வேண்டுமளவிற்கு நீரை உட்கொண்டால் வாயுதொல்லையை தவிர்க்கலாம்.