Wednesday, October 5, 2011

நாகராஜன் (எ) முனிரத்தின சர்மா.


அன்பே சிவம்
வேலும் மயிலும் துணை!

வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! 
குகனுண்டு குறைவில்லை! அருளுண்டு அழிவில்லை!


இன்பமே எந்நாளும் துன்பமில்லை. 
~~~~


விக்னேஸ்வர ஸ்துதி

வேழ முகக் கடவுளே போற்றி!
வேதனைகள் தீர்க்கும் இறைவா போற்றி!
வேந்தன் எந்தை புகழ் பாடுமுன்
வேண்டியே பணிந்திட்டோம் போற்றி! போற்றி!!

சேர்க்காடு முனீஸ்வர ஸ்துதி 

முதன்மை எமக்கருளும் முனிபுங்கவ!
முனிரத்தினந்தன் பெயர் எழுத
முனியுமுன்னுந்தன் அருள்தரும் 
முத்துமலரடியை பணிந்திட்டோம் போற்றி!

கலைமகள் ஸ்துதி

கலைவாணியே கற்பகத்தாயே மாதரசியே 
கலைவளம் எமக்கருளினாய் ஆதலினால் 
கனலரசன் எந்தை புகழ் பாட 
கவிமலர்கள் அருள்வாய் போற்றி!

வள்ளிமலை வள்ளி மணாளர் ஸ்துதி

வள்ளிமணாளரே  வள்ளலே எம்வாழ்வே 
வகைவகையாய் பாக்கள் பல இயற்றி
வண் மனத்தான் நெஞ்சம் உரைசெய்ய 
வல்லமை எமக்கருள்வாய் போற்றி!

சேர்க்காடு ஆதிகேசவர் ஸ்துதி

ஆதிக்குமாதியானாய் முடிவில்லா பெருமானே 
ஆயிரமுறை நின் சேவடிகள் பணிந்திட்டேன்
ஆரிடர் ஈண்டு வரினும் போக்கிடுவாய் வள்ளலே
நீளாதேவி பூமாதேவி உடனாய பெருமாளே போற்றி!

சேர்க்காடு செல்லியம்மன் ஸ்துதி

செம்மை எமக்குத்தந்தாய் செல்வியே 
சென்மமெலாம் உமைமறவா இன்பம் தந்தாய்
செகம் புகழ வைத்திடுவாய் தாயே
செல்லியம்ம நின் தாள் போற்றி போற்றி!

சேர்க்காடு நாகநாதீஸ்வரர் ஸ்துதி

நாடாளும் பேராசை எமக்கில்லை - ஒரு 
நாளும் உமை ஓதா நாளென்ன நாளோ?
நாகராஜன் மகவாகிய பெருமை போதும் எந்தாய் 
நாகநாத! நின் கழலிணை போற்றி போற்றி!

உலகம் முழுவதையும் தன்னகத்தே கொண்ட இறைவன் புரியும் பல விளையாட்டுக்களில் பிறப்பு-இறப்பு கண்ணாமூச்சியும் ஒன்று. ஏன் பிறந்தோம் என்று அறிந்தவரில்லை. புகழில்லார் தோன்றாமை நன்று என்றார் வள்ளுவர். நம் தோன்றலுக்கு காரணம் என்ன? முடிவது எப்போது? ஏன் முடிகிறோம்? என்று பல வினாக்கள் எழுந்தாலும் விடை காண்பதரிது. விடை காண தனிமையில் இருக்கவேண்டும். அதுவும் "சும்மா" இருக்கவேண்டும். சும்மா இருப்பது என்ன எளிதா? நம் கண் முன்னே எண்ணற்றோர் தோன்றினார்கள், துவண்டும் போனார்கள். எச்சமென பிள்ளைகளை விட்டுவிட்டு சென்று விட்டார்கள். மிகச்சிலரே அடிச்சுவடியை விட்டு செல்கிறார்கள். மலரங்காடிக்கு விளம்பரம் வேண்டா. அவர்களை கற்றோர், அறிந்தோர் தேடிச்சென்று காமுறுவர். அவர்களின் பெயரை மட்டுமே கூறவேண்டுமெனில் இப்பிறவி போதாது. அவ்வாறு முற்படுதலும் இயலாத காரியம். 

ஆயினும் கரையில் ஒதுங்கிய கட்டுமரத்தடியில் அமர்ந்து கடல் நீரை சுவைத்தாலே போதும். ஆழ் கடலுக்கு சென்று சோதனை செய்ய வேண்டாம். அப்படிப்பட்ட என்ன ஓட்டத்தில் எழுந்ததுதான் இந்த படைப்போவியம். இதை பார்ப்போர், படிப்போர், கேட்போர் நலம் பெறவேண்டும். அதோடுகூட நற்பெரியோர்கள் வாழ்க்கையை சித்தரிக்கும் பெரும் பணியை எமக்களித்திட்ட இறைவனுக்கு நன்றிகள் பலப்பல. 

உடல், உயிர் என்ற இரண்டு கூறுகளின் இணைப்பே இந்த பிறவி. ஒன்றில்லாமல் மற்றதற்கு ஏற்றமில்லை. பஞ்சபூதங்களினாலானது இந்த உடம்பு. அதை இயக்குகின்ற பராசக்தியின் அருள்தான் இவ்வுயிர். உயிரின் வழி உடல் இயங்கினால் அது மேன்மை. உடல் வழி உயிர் சென்றால் அது கீழ்மை. பராசக்தி ஆட்டிய விதமாக நம்முடலில் உள்ள பஞ்ச பூதங்கள் இயங்க வேண்டும். அனால் நம் சுபாவம், முற்பிறவிப்பயன், போன்ற இன்ன பிறகாரணங்களால் நாம் ஆட்டம் போடும் பொழுது, பராசக்தி வேடிக்கை மட்டும் பார்க்கிறாள். அப்பிறவி தீமைகளின் ஊற்றுக்கன்னாகவே ஆகி விடுகிறது. 

நன்மையே செய்யவேண்டும், நல்லதை என்னவேண்டும் எனில் நற்பிறவி எடுத்தல் வேண்டும். அவ்வாத்மாக்களை, பரமாத்மா நல்ல பெற்றோர்களிடத்தில் தத்தம் செய்து விடுகிறான். நல்பெற்றோர் வாய்ப்பதுவும் ஒரு புண்ணியமே. நல்ல நிலத்தில் நற்பயிர்கள் விளைந்து பாரெங்கும் பசிப்பிணியை போக்கும். உலக நலனையே பெரிதென போற்றும் அப்பெரியோற்கு வாய்க்கும் மகவும் நற்குடிமகனாய் விளங்கும். தீயோரை, தீய கற்பத்தில் வைத்து யுகம் யுகமாக பிறந்து வரும்படி செய்கிறேன் என்று பகவான் சொன்னதற்கிணங்க தீயோர் தம் இயல்பை விடுவதுமில்லை, நல்லோர் தம் சுபாவங்களை மாற்றிக்கொள்வதுமில்லை. 

அத்தகைய நல்லோரை உலகறிய பேசுதல் கோடி புண்ணியமே. சிறுவிளக்கினால் அறையின் இருள் மடிவது போல நல்லோர் புகழ் பாட நம் தீவினைகள் நசுங்கும். ஆதலினால் நல்லோராய் பிறந்து, எளியோராய் வாழ்ந்து, ஏற்றமுடன் இறையடியை அடைந்திட்ட எம் தந்தை திரு. நாகராஜன் வாழ்க்கை சித்திரத்தை வரையும் முயற்சியை மேற்கொண்டோம்.

தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து என்பது ஔவை பாட்டியின் மூதுரை. திருப்பதி-திருவண்ணாமலை, தர்மபுரி-சென்னைக்கிடையேயான பூமியே தொண்டை மண்டலமாகும். பாலாறு பாய்ந்து வளம் கொழிக்கும் இந்த பூமியில் சாணக்யன், ராஜாஜி போன்ற எண்ணற்ற அறிவுஜீவிகள் பிறந்துள்ளனர். அறிவு அற்றம் காக்கும் கருவி என்றுரைத்த வள்ளுவனை வையகத்துக்கு தந்தது இந்த பூமி. பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே சமதர்மம் கண்ட ராமானுஜரையும் இப்பாருக்களித்ததுவும் இந்நாடே. இத்தகைய தொண்டை நன்னாட்டில் ஏழாவது திருத்தலமாய் அமைந்தது சேர்க்காடு என்னும் பேரூர்.

மற்ற திருத்தலங்களில் ஒன்றையொன்று பாராமல் திசைக்கொருபக்கம் திரும்பி நிற்கும் நவக்கிரகங்கள் இவ்வூரில் மட்டும் ஒரே பக்கம் நோக்கி வரிசையாக அமர்ந்து அருள் பாலிக்கின்றன. ஆதலினாலேயே இவ்வூர் "சேர்க்காடு" என்னும் பெயர் பெற்றது. சென்னை-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வள்ளிமலைக்கு சுமார் 7 கி.மீ. தெற்கே அமைந்த இவ்வூரின் முதன்மைத்தொழில் உழவு. சுமார் நூறு சதவீதம் படிப்பறிவு பெற்ற மக்களே இவ்வூரின் குடிகள்.

இன்றைக்கு வேலூர் மாவட்டம், காட்பாடி பஞ்சாயத்து ஒன்றியத்தில் உள்ள மிகப்பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக சேர்க்காடு விளங்குகிறது. இயற்கையாக எழும் சிறு பூசல்களைத்தவிர, சாதி-சமய ஒற்றுமைக்கு சான்றாக விளங்குகிறது சேர்க்காடு. தமிழ், தெலுங்கு பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்டது. சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்த இவ்வூர் விஷய ஞானமுள்ள மக்களை தன்னகத்தே கொண்டது. பல்லவ காலத்தைய சிவாலயத்தையும் (1973 - ல் புதுப்பித்துக்கட்டப்பட்டது) ஔரங்கசீப் படையெடுப்பின் சீற்றத்தையும் எதிர் கொண்ட விஷ்ணு ஆலயத்தையும் நடுநாயகமாக கொண்ட மண். பல்லாற்றானும் சிறந்த பண்பை கொண்ட இவ்வூரில் வியத்தகு உண்மைகள் பொதிந்துள்ளன. குங்குமத்தை ஒரு தட்டில் பரப்பி தன் மனதில் உள்ளதை வேண்டும் பொழுது அதை ஏற்றோ மறுத்தோ உத்தரவிடும், நீளாதேவி, பூமாதேவி உடனுறை ஸ்ரீஆதிகேசவ பெருமாள் ஆலயத்தை இங்கே காணலாம். பித்துபிடித்து அலைவோர், அம்மைக்காய்ச்சலால் அவதியுறுவோர் மற்றும் பிள்ளை வரம் வேண்டுவோர்க்கு அருமருந்தென விளங்குகிறது அருள்மிகு செல்லியம்மனின் திருமஞ்சன நீர். சாதாரண குடியில் பிறந்த ஒரு அருளாளர் இந்த தாயின் அருளாசியினால் இன்று பெங்களுரு நகரில் நல்ல நிலையில் இருக்கிறார். நன்றி மறவாத அந்த பெரியவர் தன்னிலையை உயர்த்திய அந்த தாயின் திருக்கோயிலை புனரமைப்பு செய்து திருக்குடமுழுக்கும் செய்வித்துள்ளார். மேலும் இதற்கு சான்றுகள் தேவையில்லை.

தங்கள் ஊரிலேயே பிறந்து வளர்ந்து வேற்றூருக்கு மனம் செய்துக்கொண்டு சென்ற பெண்ணை பிறந்த ஊருக்கு வரவழைத்து விருந்து உபசாரம் செய்வது தகப்பன், தமையன்களின் வழக்கம். அவ்விதம் இவ்வூரில் அன்னைக்கும் உபசாரம் நடைபெறுவது சிறப்பு. இவ்வூரின் மகளாக தோன்றிய அன்னை அருள்மிகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தில் உள்ள நங்கமங்கலம் என்ற சிற்றூரை புகுந்த வீடாக கொள்கிறாள். அவளுக்கு ஆடி மாதம் திருவிழா எடுத்து சிறப்பு செய்கின்றனர் தாய்வீட்டு மக்களாகிய சேர்க்காடு கிராமத்தார். நங்கமங்கலத்தில் அமைந்துள்ள திருக்கோயில் சுமார் பத்து கிராமத்துக்கு பாத்தியபட்டதாகும். முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் செய்து வைக்கப்பட்ட அம்மனின் திருவுருவச்சிலை பல முறை களவாடப்பட்டு திரும்ப கிடைத்த பெருமை உடையது. களவாடியவர்கள் நலிவுருவதாலும், பல இன்னல்களுக் காளாவதாலும் சிலையை அதே இடத்தில் கொண்டு வந்து வைத்து விடுகின்றனர். ஆதலினால் மிகபெரிய பூட்டு, காவல் என்று எந்த ஒரு பாதுகாப்புமில்லாமல் சாதாரண மலையடிவாரத்தில் உள்ள திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியின் திருவுருவச்சிலை.

சேர்க்காடு பேரூருக்கு அருகில் உள்ள புண்ணிய தலங்களாக முருகனின் ஆறாவது படை வீடாகிய வள்ளிமலை உள்ளது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடப்பெற்ற திருத்தலம் இது. வள்ளியை முருகன் மணம்புரிய வேண்டி திருவிளையாடல்கள் நிகழ்த்தி கவர்ந்து சென்ற இடமாகும். திருவலம் என்னும் சிவத்தலம் ஊரின் கிழக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பதிகம் பாடப்பெற்ற திருத்தலத்தில் இறைவனுக்கு பின்புறத்தை காட்டி வாயிலில் மிகப்பெரிய நந்தியெம்பெருமான் வீற்றிருக்கின்றார். வள்ளிமலைக்கு அருகில் விண்ணம்பள்ளி என்றோர் சிவத்தலத்தில் இறைவன் திருமேனியில் காலைக்கதிரவனின் ஒளி விழும் அதிசய காட்சி ஆண்டுதோறும் காணக்கிடைக்கின்றது. வெள்ளையர் ஆட்சிக்கு வித்திட்ட ஆற்காடு என்னும் நகரமும், தெற்காசியாவின் மிகப்பெரிய சி.எம்.சி. மருத்துவமனை மற்றும் ஜலகண்டேஸ்வரர் அருள் பாலிக்கும் பெரிய கோட்டையும் கொண்ட வேலூர் மாநகரம் போன்றவை சேர்க்காட்டிற்கு அருகில் அமைந்துள்ளன.

மேற்கூறிய பெருமைகளை உடைய சேர்க்காடு என்ற கொண்ட இவ்வூரில் நாகராஜன் என்ற திருநாமம் கொண்ட அருமை பெரியவர் பிறந்தார். அவர் பிறந்தது பார்கவ, சியாவன, ஆப்லவான, ஔரவ, ஜாமதக்னி என்ற ஐந்து முனிவர்களின் வழி வந்த ஸ்ரீவத்ஸ கோத்ரமாகும். ப்ருகு  முனிவரின் மகளாக அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மி பிறந்ததால் பார்கவா கோத்ரம் ஸ்ரீவத்ச கோத்ரம் என்று அழைக்கப்பெறுகிறது. முகலாயர் காலத்து ஆக்கிரமிப்புகளின்போது இவ்வூரிலிருந்த பலர் திருநெல்வேலி பக்கம் சென்று விட்டாலும், சேர்க்காட்டிலேயே தங்கிவிட்ட ஸ்ரீ பாலகிருஷ்ணன் என்ற மூதாதையர் வழியில் வந்த ஸ்ரீ மார்க்கபந்து என்ற பெரியாரின் ஒரே திருமகனாக வந்துதித்தார் நாகராஜன் என்கிற ஸ்ரீ முனிரத்தினம்.

திரு. மார்க்கபந்து கி.பி. 1876 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் ஆங்கிலேயே அரசில்  காவல் துறையில் பணிபுரிந்து வந்தார். கி.பி. 1911 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற தில்லி தர்பார் (இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து புதுதில்லிக்கு மாற்றப்பட்ட நிகழ்ச்சி) என்கிற நிகழ்ச்சியின்பொழுது ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடமிருந்து வீரதீர செயல்களுக்காக "தங்கப்பதக்கம்" பெற்றார். சித்தூர் மாவட்டத்தின் புங்கநூரிலிருந்த கொள்ளையர்களை அடக்கிய சாகசத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இவருக்கு, அன்றைய வேலூர் ஊரிசு பள்ளியின் தலைமை ஆசிரியராயிருந்த திரு. கிருஷ்ணமூர்த்தி என்பாரின் திருக்குமார்த்தியான காமாக்ஷி என்ற நங்கை நல்வாழ்க்கைத் துணைவியானார்.

இல்லறத்தில் அனைத்து நலன்களும் வாய்க்கப்பெற்றாலும் நன்மக்கட் பேரில்லாவிடில் அவ்வீடு முழுமைப்பெறாது. திரு. மார்க்கபந்து தம்பதியருக்கும் அவ்விதம்தான் அனைத்து செல்வங்களும் இருந்தும் புதல்வர்கள் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகளில் ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்து சில மாதங்களில் அவர்களை விட்டு பிரிந்துவிட்டது. ஆகவே அவர்கள் கவலையில் தோய்ந்தனர். திரு. மார்க்கபந்து தாரள மனம் கொண்டவர். ஊரில் உள்ளோர் பிள்ளைகளை எல்லாம் அன்போடு வீட்டிற்கு வரவழைத்து கொஞ்சி மகிழ்வார். அவர்களுக்கு வேண்டியவற்றை வாங்கித்தருவார். விவசாய கூலிகளாக வருவோரிடம் கணக்குப் பார்க்கமாட்டார். அவர்கள் சந்தோசம் படும்படி கொடுத்தனுப்புவார். இதனால் அவருடைய குடும்பம் பற்றிய அக்கறை அந்த ஊரிலிருந்தோரிடம் இருந்தது. அவர்களும் திரு. மார்க்கபந்து வாரிசில்லாமலிருப்பது கண்டு பெரும் கவலை கொண்டனர்.

ஆண்களின் அளவிற்கு பெண்கள் அவ்வளவு எளிதில் இயல்பான வாழ்க்கையை ஏற்பதில்லை. திருமதி. காமாக்ஷி தன் கணவர் அளவுக்கு கனிவை மற்ற பிள்ளைகளிடத்தில் காட்டவில்லை. அவர் தமக்கென ஒரு திருமகன் பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டாத நாளில்லை. மனிதர்கள் தம்மால் ஒரு காரியம் இயலாது என்று என்னும் பொழுதோ அல்லது தமது வலிமை ஒன்றும் பிரமாதமானது இல்லை என்று நம்பும்போழுதோ இறைவனைத்தான் நாடுவார்கள். திருமதி. காமாட்சியும் அவ்விதமே நோன்புகள் பல இருந்தார். பல புண்ணிய ஷேத்திரங்களுக்கு செண்டு வழிபட்டார். ஈரத்துணியுடன் தலையில் பூங்கரகம் ஏந்தி ஏழு கிராமங்களை சுற்றி வருவது, இராமேஸ்வரம் சென்று இராமநாதருக்கு பூஜை செய்வது,  அரச மரத்தடியில் நாகபிரதிஷ்டை செய்து வேம்புவுடன் திருமணம் செய்விப்பது, திருமுருகன் திருவருளை வேண்டி சஷ்டி விரதம் இருப்பது என்று பல வகைகளில் வழிபாடு நடத்தினர். இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அவர்கள் சனிக்கிழமை விரதம் அனுஷ்டித்து வந்தனர். விரதம் என்றால் ஏதோ விளையாட்டுப்போல் அல்லாமல் தீவிரமாக அனுசரித்து வந்தனர். காலையில் திருமலையப்பனுக்கும், அவர்கள் பரம்பரையாக வழிபாட்டு வந்த சாலக்கிராமத்திற்கும் மாவிளக்கேற்றி வழிபாடு செய்வர். பூஜை முடிந்தப்பின் அந்த மாவை ஒரு தட்டில் பரப்பி கை இரண்டையும் பின்புறம் கட்டிக்கொண்டு வாய் வைத்து அந்த மாவை கௌவி எடுத்தபின் அன்றைய தினம் உணவில்லாமல் உபவாசம் இருந்து மறுநாள் காலை பூஜை வழிபாடுகளுக்கு பின்னர்தான் உணவு. இது வாராவாரம் நடக்கும் வைபவம்.

மனித மனம் சஞ்சலமுடையது. அதற்கு தொய்வு ஏற்பட்டால் சலித்துக்கொள்ளும். அதுபோல்தான் திருமதி. காமாட்சிக்கும் மனதில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து விரதமிருந்ததுதான் மிச்சம். பலன் ஒன்றுமில்லை என்று சலிப்படைந்தார். இறைவனின் சோதனையை சாதாரண மனிதர்களால் தாக்கு பிடிக்க முடியுமா? ஒரு சனிக்கிழமை விரதமிருந்த பின்னர் இறைவனிடம் மனமுருகி இறைஞ்சினாள். வேண்டினாள், புலம்பினாள், கெஞ்சினாள், கடைசியில் வசை பாடினாள்? ஆம் ஆராதித்த கோவிந்தனையே கண்ட மேனிக்கு திட்டி தீர்த்தாள். வசையும் ஒரு அன்பின் வெளிப்பாடுதானே? நெருக்கமான குழந்தையே "திருட்டுப்பயலே", "போக்கிரிப்பயலே" என்று நாம் திட்டுவதில்லையா? உரலில் கட்டுண்ட கோவிந்தன் இத்தகைய அன்பின் வசைப்பாட்டுக்களுக்கும் கூட கட்டுண்டுத்தானே ஆகவேண்டும்?

கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணவே, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா, நந்தனந்தனா, வெங்கடரமணா, ஸ்ரீனிவாசா என்று பல்லாற்றானும் ஆராதிக்க வேண்டிய எம்பெருமானை அவளால் இயன்ற மட்டும் திட்டி தீர்த்துவிட்டு உறங்கப்போய் விட்டாள். அவள் கனவில் அன்றைய இரவே கரியநிறக் கடவுள் எம்பெருமானார் தோன்றி, "நீ பாடிய வசை மொழிகள் போதும். நானே உனக்கு மகனாக வந்து பிறக்கிறேன். அவனுக்கு என்பெயரை வைப்பாய்" என்று கூறி கன்னத்தில் ஒரு அறை அறைவித்து சென்றான். அடியின் வலி தாங்கவோன்னது கதறி எழுந்த காமாக்ஷி ஐயோ முறையோ என்று தவித்துப்போனாள். தன் கணவரிடம் நடந்ததை கூறினாள். அவர்கள் தவறை உணர்ந்து இறைவரிடம் மன்னிப்பு வேண்டினர்.

இறைவன் திருக்கூற்றுப்படி மார்க்கபந்து தம்பதியினருக்கு அடுத்த பத்தாவது மாதத்தில், அதாவது அக்ஷய ஆண்டு (1926), தக்ஷிணாயன காலத்தில், ஆவணி மாதத்தில், முழு நிலவு நாளில், திருவோண நக்ஷத்திரத்தில்-திருவேங்கடத்தானின் திரு நக்ஷத்திரமும் திருவோனம்தான், ஒரு அழகான ஆண்மகவு பிறந்தது. பிறந்த பொழுதிலேயே எல்லா நற்பண்புகளுக்கும் அமைவிடமாக இருந்த அந்த பிள்ளைக்கு, இறைவன் ஆணைக்கிணங்க ஸ்ரீனிவாசன் என்ற திருப்பெயரிட்டே அழைத்தார்கள். குலதெய்வம்  முனீஸ்வரபெருமான் என்ற காரணத்தினால் முனிரத்தின சர்மா என்ற பெயருமிட்டார்கள். ஜாதகப்பெயராக முனிரத்தினம் என்றமைந்தாலும், ஸ்ரீனிவாசன் என்ற பெயர் மட்டும் நிலைக்கவில்லை. அதற்கும் ஒரு காரணமிருந்தது.

பல்லாண்டுகள் பிள்ளையில்லா  வீட்டில் பிள்ளை பிறந்தது என்றால் அந்த பெற்றோரின் மகிழ்ச்சியை யாரால் அளவிடமுடியும். அதுவும் அந்த தாயின் திருவுள்ளத்தை யாரால் புரிந்துக்கொள்ளமுடியும். பங்காளிகளின் ஏளனப்பார்வை ஒருபுறம் என்றால், கணவரே, "இனி நமக்கு குழந்தைப் பிறவாது, ஆகவே நான் என் அண்ணன் மகனை தத்தெடுக்கப்போகிறேன் என்று சொல்லி ஒரு குண்டையும் போட்டிருந்தார் மறுபுறம்". அப்படிப்பட்ட நிலையில் திருமலை ஆனந்தநிலையவாசனாகிய எம்பெருமானார் தன் விரதத்தை அங்கீகரித்தான் என்று உணர்ந்த அந்த மாதரசியின் ஆனந்தத்தை எதனோடு ஒப்பிடுவது. தன் மகனை தலையில் வைத்து கொண்டாடினாள். அந்த வேளையில் ஒரு சோதனை நிகழ்ந்தது.

ஸ்ரீனிவாசனை கூடத்தில் படுக்க வைத்துவிட்டு அவள் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தாள். கூடத்தில் தூய துணிகளை (மடி) உலர்த்துவதற்கென கொடி கயிறு கட்டி வைத்திருந்தார்கள். அதில் துணிகளை எட்டி பரப்பிக்கொண்டிருந்தார் காமாக்ஷி. எப்படியோ ஒரு நல்லப்பாம்பு (மனைபாம்பு) கீழே படுத்துக்கொண்டிருந்த ஸ்ரீனிவாசனை சுற்றிக்கொண்டுவிட்டது. இதை கவனியாத காமாக்ஷி ஒரு எட்டு எட்டும்போழுது தவறி அதன் வாலை  மிதித்துவிட்டாள். அது உடனே 'புஸ்' என்று சீறியது. அந்த ஒலி கேட்டு திரும்பிய காமாக்ஷி அங்கே குழந்தையை பாம்பு சுற்றி இருப்பது கண்டு பதறிப்போனாள். ஒரே சத்தம் போட்டு ஊரை கூட்டினாள். தாயின் உள்ளம் எப்படி இருந்திருக்கும். ஊரிலுள்ளோர் தடியும் தாம்புமாக பாம்பை அடிக்க வந்து விட்டார்கள். அவர்களை திரு. மார்க்கபந்து தடுத்து விட்டார். அது மனைபாம்பு. என் குழந்தையை ஒன்றும் செய்யாது. அப்படி செய்வதாக இருந்தால் செய்யட்டும் அது இறைவன் கொடுத்தது, நீங்கள் அதற்கு எந்த தீங்கும் விளைவிக்க வேண்டாம் என்று கூறினார். குழந்தை ஒன்றுமறியாமல் கை கால்களை உதைத்தபடி விளையாடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்திலேயே அந்த பாம்பு அங்கே முற்றத்திலிருந்த ஜாலி வழியாக வெளியேறிவிட்டது. மற்ற பாம்புகளுக்கில்லாத சிறப்பு நாகத்திற்கு உண்டு. நாம் தீங்கு செய்யாத வரை அது நமக்கு ஒரு தீங்கும் செய்யாது. ஆகவேதான் தமிழில் அதை 'நல்ல பாம்பு' என்பார்கள்.

பாம்பரசன் வாழ்த்தி அருளியதால் ஸ்ரீனிவாசனை 'நாகராஜன்' என்ற காரண பெயரிட்டு  அழைத்தார்கள். அதுவே நாளடைவில் இயற்பெயராக அமைந்து விட்டது. நாகராஜனை சீராட்டி பாராட்டி வளத்துவந்தார்கள். ஆரம்ப காலங்களில் திருவலத்தில் தமிழும், பின்பு சித்தூரில் தெலுங்கும், பின்னர் வேலூர் மவுண்ட் ஸ்கூலில் (இன்றைய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல் நிலைப்பள்ளி) ஆங்கிலமும் படித்தார். மவுன்ட் ஸ்கூலில் படித்த சமயம் தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபா, சென்னை (தேச ஒற்றுமை கருதியும், தென்னாட்டில் இந்தியை பரப்பவும் காந்திஜி தொடங்கி வைத்த சபா)  நடத்திய பிராதமிக் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை சென்று காந்திஜியின் கையால் சான்றிதழ் பெற்ற நிகழ்ச்சியை தம் இறுதி காலம் வரை நினைவில் வைத்து மகிழ்ந்தார்.

பள்ளிப்பருவங்கள் அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாத காலங்கள். அப்போதைய சில நிகழ்வுகளை யாராலும் மறக்க முடியாது. அவ்விதமே நாகராஜனுக்கு சில அனுபவங்கள் உண்டு. சித்தூரில் குடியிருந்த பொழுது அன்றைய திரைப்பட நடிகர் சித்தூர் G. நாகையா இவருடைய நண்பர். இவரையும் திரைப்பட துறையில் ஈடு படுத்த வேண்டி காமாட்சியிடம் வேண்டுவார். காரணம் நாகராஜனின் பெர்சனாலிட்டி அப்படி. ஆனால் தன் ஒரே மகன் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்பதற்காக அந்த கோரிக்கையை தாயார் நிராகரித்தார்.

1942 - ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த காலங்களில், புரட்சிக்கு வித்திட்ட வேலூர் மாநகரிலும் போராட்ட அனல் வீசியது. பள்ளியில் படிக்கும் மாணவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. நாகராஜன் உள்ளிட்ட மாணவர்கள் சாலையில் போகும் பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் மீது கல்லெறிந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டுவார்கள். போலீஸ் வருவதற்குள் ஓடி சென்று பள்ளியில் புகுந்துக் கொள்வார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை எச்சரித்தாலும், கண்டிப்பதில்லை. போலிசும் பள்ளிக்குள் வரக்கூடாது என்பதற்காக மாணவர்களை கைது செய்வதுமில்லை. இப்படிப்பட்ட நிலையில் மாணவர்களுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. தங்களாலும் வெள்ளையர்களை எதிர்க்க முடிந்ததே என்ற நிம்மதிதான்.

சந்தோசம் என்றொரு தமிழாசிரியர் இருந்தார். சிறந்த கல்விமானாக திகழ்ந்த இவருடைய படைப்புக்கள், பின்னாளில் பள்ளி, கல்வி பாடப்புத்தகங்களில் மாணவர்களுக்கான பாடபிரிவாக சேர்க்கப்பட்டன. இனிமையான நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின் தமிழார்வத்தை தூண்டுவாராம். எழுவாய்-பயனிலை-செயபடுபொருள் பற்றி மாணவர்களுக்கு விளக்கும் விதமே நகைச் சுவையாயிருக்கும். மாணவர்களை ஒரு வாக்கியம் அமைத்து பிரித்து கூறும்படி கேட்பார். மாணவர்கள் விழிப்பார்கள். அப்பொழுத் "ராமா! நீ எழுவாய். படிப்பது பயனிலை, செயப்படுபொருள் கழுதை மேய்த்தல்" என்று கூறும்பொழுது வகுப்பறையே அதிர மாணவர்கள் சிரிப்பார்கள். இப்படித்தான் ஒருமுறை, பூனா எங்கே இருக்கிறது என்று கேட்ட கேள்விக்கு மாணவர்கள் பதில் கூறாமல் விழித்தார்கள். மும்பை செல்லும் வழியிலிருக்கிறது என்று கூற அவர்களுக்கு தெரியவில்லை. ஒரு மாணவனை எழுப்பி ஆனா, ஆவன்னா கூறும்படி சொன்னார். அவன், பானா-பாவண்ணா-பீனா-பீயன்னா-பூனா-பூவண்ணா என்று கூறினான். உடனே நிறுத்தச்சொல்லி, பூனா, பீயன்னாவுக்கும் பூவண்ணாவுக்கும் நடுவில் உள்ளது என்று விளையாட்டுக் காட்டுவாரம்.

இளவயதில் நாகராஜன் தலையில் குடுமி வைத்து காதில் கடுக்கன் போட்டிருப்பார். குடுமியை கிண்டல் செய்த, கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த சில குறும்புக்கார மாணவர்கள் அவரது குடுமியை வெட்டிவிட்டார்கள். குடுமி இல்லாததை கண்ட தந்தையார் கோபித்துக்கொண்டார். ஆசிரியர்களும் கண்டித்தனர். அனால் நடந்ததை இவர் யாரிடமும் சொல்லவுமில்லை, அதன் பிறகு குடுமி வைத்துக்கொள்ளவுமில்லை. புஷ்பராகம் கல் போட்ட கடுக்கனும் இப்படித்தான் பறிபோனது. அக்கம்பக்கத்து சிறுவர் சிறுமிகளுடன் விளையாடும் காலத்தில், ஒரு சிறுமி, நாகலிங்கப்பூவை, கொடுத்து கடுக்கனை பெற்று சென்றாள். அந்த பூ நாகராஜனுக்கு மிகவும் பிடித்தமானது. அதனால் அவரை ஏமாற்றுவது எளிதாக இருந்தது அந்த சிறுமிக்கு. விஷயமறிந்து நாகராஜனின் தாய் சென்று கேட்பதற்குள் அவ்விதம் நடக்கவில்லை என்று மறுத்துவிட்டாள் அந்த சிறுமி. கடுக்கன் அதோடு காணமல் போனதுதான்.

படிப்பில் சிறந்த மாணவனாக விளங்கிய நாகராஜனுக்கு தமிழின் மீது ஆர்வம் இருந்தாலும் அதில் வாங்கும் மதிப்பெண்களோ சுமார்தான். கணக்கிலோ சூரப்புலி. நூற்றுக்கு நூறு வாங்குவது மிகவும் கை வந்த கலை. அன்றைய காலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு மாணவர்களை அனுப்புவதற்கு முன் தெரிவு தேர்வு ஒரு வைத்து அதில் தேறுபவர்களை மட்டுமே பொது தேர்வுக்கு அனுப்புவார்கள். முன் தேர்வில் நல்ல முடிவை எதிர்பார்த்திருந்த நாகராஜனுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. தேர்ச்சிப்பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. நன்றாகத்தானே தேர்வு எழுதினோம். ஏனிப்படி ஆனது. என்று அழுதுவிட்டார். இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த ஆங்கில பாடம் நடத்தும் வகுப்பாசிரியரும் மிகுந்த வருத்தமடைந்தார். கணக்குப்பாடத்தில் நாகராஜன் தவறி இருப்பதை அறிந்த அவர் சம்பந்தப்பட்ட கணக்காசிரியரிடம் சென்று வினவினார். அவரோ தாம் ஏதும் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டார். அனால் வகுப்பாசிரியர் விடுவதாக இல்லை. விடைத்தாட்களை மறு மதிப்பீடு செய்ய வைத்தார். சுமார் 85 மதிப்பெண்கள் பெற்று நாகராஜன் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டார். தமக்காக மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்ட வகுப்பாசிரியருக்கு நன்றி கூறினார்.

அது சரி. அந்த கணக்காசிரியர் ஏன் அப்படிசெய்தார்? விடைத்தாளை திருத்தும் பொழுது ஏதேனும் கவனக்குறைவு ஏற்பட்டதா என்றால் இல்லை. அவர் வேண்டுமென்றே தான் அவ்வாறு செய்தார் என்பது பின்னர் தெரியவந்தது. அதற்கொரு காரணமிருந்தது. வகுப்புகளில் மாணவர்களை உயரம் வாரியாக அமர வைப்பார்கள். குள்ளமான மாணவர்களை முன் வரிசையிலும், உயரமான மாணவர்களை கடைசி வரிசையிலும் அமர வைப்பது வழக்கம். அப்படித்தான் நல்ல உயரமான மாணவனாக இருந்த நாகராஜனை கடைசி பெஞ்சில் அமரவைத்திருந்தார்கள். பொதுவாக கடைசி பெஞ்ச் மாணவர்கள் துடுக்குத்தனமுடையவர்களாக இருப்பார்கள். அம்பு விடுவது, படம் வரைவது, முன்னிருக்கும் மாணவனின் தலை முடியை பிடித்திழுப்பது, வினோத குரல் எழுப்புவது, சீண்டுவது என்று இருக்கும். நாகராஜன் அமைதியான பிள்ளையாயிருந்தாலும் அந்த வரிசையிலிருந்த சில மாணவர்களின் இத்தகைய செய்கை ஒட்டுமொத்த வரிசைக்கே ஒரு தனி பெயரை ஏற்படுத்தி இருந்தது. கணக்கு ஆசிரியர், கனத்த உருவமும், பெரிய வயிறும் கொண்டவராக இருப்பதை குறித்து அவர்கள் கிண்டல் செய்வார்கள். அவர் வரும்போது போகும்போதெல்லாம் அவர் காதில் விழும் வண்ணம், "வயித்துமுட்டி புண்டா சோறு" என்று கோஷம் போடுவார்கள். அவர் திரும்பி பார்க்கும் முன் ஓடி விடுவார்கள். ஆகவே அவரின் கோபத்திற்கு கடைசி பெஞ்ச் மாணவர்கள் ஆளானார்கள். அதன் விளைவு அவர்கள் அனைவரும் முந்தைய தேர்வில் கணக்கு பாடத்தில் வடிகட்டப்பட்டுவிட்டனர். நல்ல வேலை வகுப்பாசிரியரின் தலையீட்டின் பேரில் நாகராஜன் தப்பினார். மாணவர்களைப்பற்றி நன்கு தெரிந்த வகுப்பாசிரியர்கள் இருப்பது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க ஏதுவாக இருக்கும். இத்தனை போராட்டங்களுக்கு பிறகு தேர்வெழுதி விட்டு வந்ததுதான் தெரியும். நாகராஜன் அடுத்த நான்காண்டுகள் படுத்தப்படுக்கையாகிவிட்டார்.
----------------
சொத்துக்காக ஆசைப்பட்ட பங்காளி ஒருவரின் கைங்கர்யத்தால் நாகராஜன் சூனியவாதைக்கு இலக்காகி படுத்த படுக்கையானார். உடல் மெலிந்து, நினைவுகள் இழந்து, உணவு ஏற்பதுமின்றி மிகுந்த வேதனைப்பட்டார். பல வைத்தியங்கள் செய்து பார்த்தார்கள். குணமானபாடில்லை. பௌர்ணமி-அமாவாசை நாட்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும். தீய சக்திகளை ஏவி அவருடைய உடம்பு குணமாகாமல் பார்த்துக்கொண்டார் அந்த நல்ல பங்காளி.

திக்கற்றவர்களுக்கு தெய்வம்தான் துணை என்று இறைவனையே சரணடைந்தார்கள். கிராம தேவதையான ஸ்ரீசெல்லியம்மன் மீது அபிஷேகம் செய்த புனித நீரை கொண்டு வந்து நாகராஜன் மெது தெளிப்பார்கள். பிறகு சிறிது நேரத்திற்கு நிம்மதியாக உறங்குவார். அனால் பங்காளியின் கவனிப்பு நோய் தொடர்ந்து விடும். படுக்க முடியாமல், நடக்க முடியாமல், இருக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டார். பெரும் இன்னல்களுக்கிடையே பிறந்த பிள்ளை அவதியுறும்பொழுது பெற்றவர்களால் பார்த்து சகித்திருக்க முடியுமா? பல நூறு ஏக்கர் கணக்கிலிருந்த நிலங்களை விற்று வைத்தியம் பார்த்தார். பல கிராமங்களில் பறந்து விரிந்திருந்த நிலங்களை பார்வையிட மார்கபந்துவின் தகப்பனார் திரு. சுப்பிரமணியம் குதிரை வண்டியில் செல்வார். அந்த அளவிலான நிலங்களையெல்லாம் மகனின் மருத்துவ செலவிற்காக வந்த விலைக்கு விற்றார். சொத்துக்கள் போயினவே ஒழிய மகன் தேறவில்லை. நாளுக்கு நாள் உடல் நிலை மோசமானது. பெற்றவர்கள் நம்பிக்கை இழந்தார்கள்.

அந்த சமயத்தில் பொங்கல் பண்டிகை வந்தது. மார்க்கபந்துவிற்கு சுந்தரராமன் என்று ஒரு அண்ணா இருந்தார். அவர் அருகிலிருந்த மேல்பாடி என்ற சிற்றூரில் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் மீது நாகராஜனுக்கு அளவற்ற பாசம். எப்பொழுது பெரியப்பா வருவார் என்று வாயிலில் எதிர் பார்த்து காத்திருப்பார். பெரியப்பாவும் வெறுங்கையோடு வரமாட்டார். தின்பதற்கு ஏதாவது வாங்கி வருவார். அவர் கோட் பாக்கெட்டில் கட்டி கற்கண்டுகள் கொண்டுவருவார். அதை வாயில் போட்டு மென்று சட்டையெல்லாம் கற்கண்டு ஜொள்ளு வழிய நிற்பதை பார்ப்பது அவருக்கு ஒரு மகிழ்ச்சி. அவர் விசேஷ நாட்களில் சேர்க்காடு வர தவறுவதில்லை. அப்படித்தான் பொங்கல் பண்டிகைக்காக போகி அன்றே அவர் சேர்க்காடு வந்துவிட்டார்.

அன்று போகிப்பண்டிகைக்கு எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்தனர் மார்க்கபந்து தம்பதியினர். எந்த நேரமும் பிள்ளையின் உயிர் பிரியும் என்ற முடிவுக்கு வந்தவர்களாக நாகராஜனை முன் வராண்டாவில் கிடத்தி விட்டு புலம்பிக்கொண்டிருந்தனர். இதை கண்ட சுந்தரராமன் அவர்களைக் கோபித்துக்கொண்டார். மகனை உள்ளே படுக்கவைத்துவிட்டு பண்டிகைக்கு தயார் செய்ய சொன்னார். மகன் இறக்கமாட்டான் என்றும் மிகச்சிறந்த ஆட்களை வைத்து அவனுக்கு ஏற்பட்ட நோய்க்கான காரணத்தை அறியலாம் என்று கூறி அவர்களை தேற்றினார். அந்த பொங்கல்தான் நாகராஜனுக்கு திருப்பு முனையாக அமைந்தது. தன எதிர்கால வாழ்வின் மீது நம்பிக்கைக்கொண்ட பெரியப்பாவை தன் ஆயுள் உள்ளவரை நேசித்தார். அவர் பெயர் தன் குடும்பத்தை விட்டு நீங்கக்கூடது என்பதற்காக தன் பிள்ளை ஒருவனுக்கு அவர் பெயரை சூட்டி நன்றி தெரிவித்தார்.

அந்த பொங்கலுக்குப் பிறகு இறைவன் அந்த குடும்பத்தின் மீது கருணை பொழிய தொடங்கினான். அந்த ஊரிலேயே மந்திரிக வேலைகளில் கைதேர்ந்தவரான திரு. கோபால் முதலியார் என்ற பெரியவர் மூலம் தன் பிள்ளைக்கு பங்காளி ஒருவனால் ஏற்பட்ட பாதிப்பை உணர்ந்துக்கொண்டார். அதைபோக்கும் வல்லமை தமக்கில்லாவிட்டாலும் அருகிலுள்ள விஷாரத்தை சார்ந்த ஒரு இஸ்லாமிய நண்பரிடம் அழைத்துசென்று அதை போக்கினார். சூனியத்தை முறித்து தாயத்து ஒன்றை கட்டினார் சாயபு. அன்றிலிருந்து குணமாக தொடங்கினார் நாகராஜன். பெயருக்கிருந்த பங்காளி உறவும் அதோடு முறிந்தது. நாகராஜன் குணமானாரே ஒழிய சிறுகுழந்தையாகத்தான் இருந்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேறியிருந்தும் அவர் அனைத்தையும் மறந்து விட்டிருந்தார். சொல்லப்போனால் எழுத படிக்கக்கூட இயலவில்லை. என்ன செய்வார் அந்த தந்தை. அவரால் இயன்ற வரை சொல்லிக்கொடுத்தார். அவருக்கு பேருதவியாக இருந்தது 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை. விரைவில் அனைத்தையும் மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்து பூரண குணமடைந்தார் நாகராஜன்.

நாகராஜனுக்கு பத்தொன்பதாம் அகவையில் காந்திமதி என்னும் நல்லாளை மணமுடித்து வைத்தார்கள். திருமணத்திற்குப்பிறகு அரசுப்பணிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத்துவங்கின. தந்தையின் விருப்பத்திற்கேற்ப காவல்துறை உதவி-ஆய்வாளராக தேர்ச்சி பெற்றாலும் தாயாரின் வேண்டுகோளை ஏற்று அதை நிராகரித்தார். ஏற்கெனெவே கணவர் காவலர் பணியில் பட்ட தொல்லைகளை நினைத்து அவ்வம்மையார் தடுத்துவிட்டார். அடுத்து M.S.M ரெயில்வேயில் நிலைய அதிகாரியாக நியமனம் பெற்றார். பொறுப்பேற்க திருச்சிக்கு செல்ல வேண்டிய நிலையில் தந்தையார் சுகவீனம் அடைந்தார் என்ற செய்தி கேட்டதும் பணி நியமன உத்தரவை கிழித்தெறிந்தார். இறைவனின் விருப்பமாக, தாய் தந்தை மகிழ முனிசிப் கோர்டில் பணிபுரிய தலைப்பட்டார்.

அன்புக்கொரு மகளும், அறிவுக்கொரு மகனும் பிறந்த வேளையில் தந்தையார் கயிலாயத்திற்கேகினார். சுமார் 27 ஆம் வயதில் முழு குடும்பா பொறுப்பும் இவர் தலையில் விழுந்தது. சுதந்திரமாக இருந்த கன்றுக்குட்டியின் கழுத்தில் நுகத்தடியை வைத்து ஏரில் பூட்டிய கதை போலானது. இறைவன் சித்தம் அதுவானால் யார் என்ன செய்ய முடியும். ஆனால் அதுவே அனுபவ வாசலை திறந்து விட்ட முதல் படியானது.

குடும்பத்தை வழி நடத்துவது என்பது ஒரு பெரும் சவால். கலையும் கூட. ஏதோ சம்பாதித்தோம், தின்றோம், தீர்ந்தோம் என்பதல்ல. குடும்பம், மனைவி, மக்கள் என்று அமைவது இறைவன் கொடுத்த வரம். அவ்வரங்களை வீணடிக்காமல் செல்லவேண்டும். குடும்பத்தில் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வரும் போகும். ஆனால் அவை வாயில் படியை தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டுக்காரன் பஞ்சாயத்திற்கு வந்தால் வீட்டில் நிம்மதி சீர்குலையும். பிள்ளைகளை ஒழுக்க சீலர்களாக வளர்க்க வேண்டும். படிப்பு என்பது இரண்டாம் பக்ஷம்தான். கடன்படாமல் வாழவேண்டும். உற்றார் உறவினர் நண்பர்கள் முன்னிலையில் தலை நிமிர்ந்து வாழவேண்டும்.இத்தனை பொறுப்புகளோடு நாகராஜன் குடும்பத்தை நடத்தி வரும் வேளையில் கையில் ஒரு மூன்று மாத குழந்தையை கொடுத்து விட்டு நானும் என் மாமனார் சென்ற புண்ணிய லோகத்திற்கு செல்கிறேன் என்று சென்றுவிட்டாள் மகராசி. இந்த பரிதாபத்திற்குரிய நிலையிலும் தாயார் கொடுத்த தைரியத்தோடு மேலும் நடை போட்டார். தன் விருப்பத்திற்கு மாறாக தாயார் மறுமணம் செய்து வைத்ததை கடுமையான போராட்டத்திற்கு பின்னரே ஏற்றார். சாந்தா அம்மையார் விளக்கேற்ற வந்தார். பல கசப்பான அனுபவங்களை அந்த மறுமணம் அளித்திருந்தாலும் தனது தாயாருக்கு கொடுத்த வாக்குறுதிக்கேற்ப அனைத்தையும் மனத்திலேயே மென்று விழுங்கினார். குழந்தைகளின் எதிர்காலங்களை கருத்தில் கொண்டு கடமையாற்ற தொடங்கினார்.

தாயாரின் மரணம், குழந்தைகள் உடல் நலக்குறைவு, அலுவலக இடர்பாடுகள், விவசாய பாதிப்புகள் போன்ற காரணங்களுக்காக பொருளாதார தட்டுப்பாடு ஏற்பட்டது. இருப்பினும் இறைவன் நம் தோள்கள் தாங்கமாட்டதா அளவிற்கு சுமைகளை வைக்க மாட்டான் அல்லவா? பிள்ளைகள் பணிக்கு சென்றார்கள். ஆழம் விழுதுகள் போல அப்பாவின் பாரத்தை சுமக்க தொடங்கினார்கள். நிம்மதி பெருமூச்சு விட்டார். குழந்தைகள் அனைவரையும் முயன்று கரை சேர்த்தார். அவரவர் விருப்பம் போல திருமணமும் செய்வித்தார்.

தமக்கு பொறுப்பு குறைந்து விட்டதே என்று ஆதங்கப்பட்டார். உழைத்தே பழகி போன மனிதர்கள் ஓய்வெடுக்கும் நிலை வந்தால் நோடித்துப்போவார்கள். அவர்களுக்கு ஓய்வும் ஒரு பிணிதான்.  அந்த பிணியின் காரணமாக இரண்டுமுறை பக்கவாதம் வந்தபோதும் அவருடைய தைரியமும், தன்னம்பிக்கையும், இறைவன் மீது கொண்ட ஆற்றொணா பக்தியும், CMC மருத்துவர்களின் முயற்சியும் என மீண்டு வந்த போதிலும், மூன்றாவது முறை இறைவனின் சித்தம் இதுவென பொன்னுடல் நீத்து புகழுடம்பு எய்தினார்.                

தோற்றம் சிறப்பாக அமையுமானால் மறைவும் அவ்விதமே அமையும். அவையும் கருவிலே திருவுடையார்க்கு மட்டுமே அமையும். வாழ்வில் பல இன்னல்களை சந்தித்த பீஷ்ம பிதாமகனாரின் வாழ்வும் அப்படித்தான் அமைந்தது. அவர் விரும்பும் வண்ணம்தான் மரணம் சம்பவிக்கும் என்ற திருவரம் பெற்ற பெருமகனாரல்லவோ அவர்? ஆம் நாகராஜன் இப்பூவுலகை நீத்தது தாரண வருடம் புரட்டாசி மாதம் கிருஷ்ண (மஹாளய) பக்ஷ சஷ்டி திதி, திங்கட்கிழமைதான் (04/10/2004). புரட்டாசி மாதம் பெருமாளுக்குரியது. பிறந்தது ஆவணி மாதம், இறைவன் வாமன ரூபம் கொண்ட மாதத்தில். மறைந்தது அதே இறைவன் ஸ்ரீனிவாச ரூபம் கொண்ட மாதத்தில். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட மாதங்கள் மிக நெருக்கமானவையாகவோ அல்லது ஒன்றாகவோ இருப்பது நலம். ராஜாஜி, எம்.ஜி.ஆர். போன்ற ஒரு சிலருக்கே அவை வாய்க்கப்பட்டன. அவ்வரிசையில் திரு. நாகராஜனும் சேர்ந்து விட்டார்.

ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற்றமடைய நால்வர் துணை வேண்டும். தாய், தந்தை, குரு, தெய்வம் என்ற அந்த நால்வர் கடைசியில் நாம் பயணிக்கும் நால்வர் வரை நமக்கு அருளாசி தந்து நம்மை உயர்த்துவார்கள். அந்த முதல் நால்வரின் அருளாசி இன்றி யாரும் முன்னேற முடியாது. அப்படி எதிர் நீச்சல் போட்டு முன்னேறியவன் 'கர்ண மகாப்பிரபு' மட்டுமே. இந்நால்வரின் அருளாசி வாய்க்கப்பெற்று, அவர்களையே சரணாகதி அடைந்து பலவித 'சத்திய சோதனை'களை தாங்கியவர்கள் மிகச்சிலரே. அவர்களுள் மகாத்மா காந்தியை உதாரணமாக கூறலாம். எமக்குத்தெரிந்த வரையில் திரு. நாகராஜனும் அவ்வரிசையில் இடம்பெற்றுவிட்டார் என்றே கூறுவோம்.

இளமைக்காலம் தாண்டிய பெற்றோருக்கு மகனாக பிறந்தார். (இவர் பிறக்கும்பொழுது திரு. மார்க்கபந்துவிற்கு வயது 43). அளவறிய பாசத்தை பொழிந்தார்கள். தங்கத்தை சுடச்சுட ஒளிர்வது போல், இறைவன் இவருடைய நேர்மையை உலகிற்கு உணர்த்த மேலும் மேலும் சோதனைகளை தந்துக்கொண்டேயிருந்தான். அச்சோதனைகளை இவர் இறைவனின் பாதார விந்தங்களை பற்றியபடியே வென்று வந்தார்.

ரெயில்வே பணிநியமன உத்தரவை கிழித்துப்போட மனம் வேண்டும். தந்தையாரின் நலன் தான் முக்கியம். பணி உத்தரவு கையிலிருந்தால் அது நம் மனத்தை சஞ்சலப்படுத்தும் என்றெண்ணி அதனை ஒரு நொடியில் கிழித்தெறியும் தைரியத்தை இறைவன் தான் அளித்திருந்தான்.

நீதித்துறையில் பணியில்ருக்கும் காலங்களில் பல சவால்களை சந்தித்தார். வடாற்காடு (இன்றைய வேலூர்) மாவட்டத்தின் பல நீதி மன்றங்களில் பணி புரிந்திருக்கிறார். சென்னை உயர் நீதி மன்றத்தின் நீதி பதிகலாயிருந்த நீதி அரசர்கள், மகாகனம் பொருந்திய திரு. CJR பால், திரு. ரத்தினவேல் பாண்டியன், திரு. அலெக்சாண்டர் போன்ற பலரிடம் தனிப்பட்ட முறையில் பாராட்டுப்பெற்றார். நீதிமன்றங்களில் "சிரஸ்தார்" என்பது சிறப்பு வாய்ந்த பதவி. அந்த பதவிக்காக திரு. நாகராஜன் தகுதி பெற்றார். அதே சமயம் மற்றொரு நண்பரும் தகுதி பெற்றிருந்தார். அந்த நண்பர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பட்டப்படிப்பை ஒரு கூடுதல் தகுதியாக பெற்றிருந்தார். இருப்பினும், ரகசிய அறிக்கை (CR) மற்றும் பல்வேறு மேலதிகாரிகள், நீதி அரசர்களின் குறிப்புகள், பாராட்டுதல்கள் திரு. நாகராஜனை "சிரஸ்தார்" பதவியில் அமர்த்தியது. இதையே சவாலாக ஏற்று அந்த நண்பர் சட்டம் பயின்று பின்னாளில் அதே நீதி மன்றத்தில் "மாஜிஸ்டிரேட்" பொறுப்பும் வகித்தார் என்பது வேறு கதை. போட்டி என்றால் இப்படி இருக்க வேண்டும்.

தந்தையார் பிரிவிற்குப்பின் குடும்ப பொறுப்பை ஏற்ற நாகராஜனுக்கு ஊர் மக்கள் பேருதவியாக இருந்தார்கள். சாதி வித்தியாசமெல்லாம் பாராது ஒரு தாய் பிள்ளைகள் போல பக்க பலமாக இருந்ததால் இவரால் அந்த ஊரை தன் மூச்சுக்காற்றுப்போல சுவாசிக்க முடிந்தது. தன் சமூகத்தை சார்ந்த சுமார் 25 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புலம் பெயர்ந்து நகரங்களுக்கு சென்று விட்ட நிலையிலும் சாகும்வரை என் ஊரை விட்டு செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக அங்கேயே இருந்தார்.

உடல் நலம் குன்றிய காலங்களில் திரு. பெத்த பொஜ்ஜி நாயுடு, திரு. ரங்கப்ப நாயக்கர், திரு. முனிசாமி நாயக்கர், திரு. அண்ணாசாமி முதலியார், திரு. சின்னச்சாரி போன்ற பெரிய மனிதர்களும், இன்னும் பெயர் தெரியாத பல புண்ணியவான்களும் காட்டிய அன்பும் ஆதரவும் இவரை அந்த ஊருக்கே அடிமையாக கட்டிப்போட்டுவிட்டது. வேறு வகுப்பை சார்ந்த இந்த உத்தமர்களின் பேரன்பிற்கு கட்டுப்பட்டிருந்தார் திரு. நாகராஜன். இவர் உடல் நலிவுற்றிருந்த பொது ஊரார் அருகிலிருந்து கவனித்துக்கொண்டார்கள். அம்மை போட்டிருந்த காலங்களில் ஆட்டுப்பால் கொடுத்தால் நல்லது என்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் தினமும் ஆட்டுடன் வந்து நிற்பார். அவர்.  திரு. A.கோபால் ரெட்டியார் அவர்களில் தகப்பனாராவார். திரு. கோபால் ரெட்டியார் அவர்களும் நாகராஜநிடத்தில் மிகுந்த பாசம் வைத்திருந்தார். கொல்லையிலோ, வீட்டிலோ ஒரு பொருள் திருட்டுப்போகாது. போட்டது போட்டபடி இருக்கும். இதனால் தான் இந்த ஊரை விட்டு என்னால் வர இயல வில்லை என்று அடிக்கடி கூறுவார். அந்த ஊருக்கு நன்றியாக அவ்வூர் இளைஞர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து ஊக்கப்படுத்துவது, ஊரில் நிகழும் சிறு சிறு சண்டை சச்சரவுகளை தீர்த்து வைத்து கோர்ட்டு படியேராமல் தடுப்பது, கோயில் திருவிழாக்களில் தம்மாலான திருப்பணியை செய்வது, எல்லாவற்றிற்கும் மேலாக ஊருக்கு புதிதாக அரசுப்பேருந்து இயக்க முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றது, என பலவாறு தொண்டாற்றினார்.


குணநலன்கள்:

திரு. நாகராஜனின் சிறப்பு குணங்கள் சிலவற்றை இங்கு காணலாம். 

கோபம்: திரு. நாகராஜனுக்கு திடீரென்று கோபம் வரும். காரணமில்லாமல் வராது. கொடுத்த பணியை ஒருவர் சரியாக செய்யாதபோதும், தவறாக செய்யும் பொழுதும் அடுத்தவர் மீது பழியை போடும்போதும் அவருக்கு கோபம் வரும். அந்த கோபத்தின் மூலம் நன்மைதான் விளையும். அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்வார்கள். குழந்தைகள் படிப்பில் கவனம் குறையும்போதுகூட கோபம் கொள்வார். அந்த கோபத்துடன் சிலநாட்கள் அவர்களுடன் பேசாமலிருந்து விடுவார். அதுதான் அவர்களுக்கு தண்டனை. அவர்கள் உணர்ந்து மன்னிப்பு கேட்பதுடன் மீண்டும் தவறுக்கு இடம் கொடாமல் நடந்துக்கொள்வார்கள். இப்படிப்பட்டதுதான் அவருடைய கோபம். 

நகைச்சுவை: அவருடைய நகைச்சுவை உணர்வு என்பது இயற்கையிலேயே உண்டானது. அடுத்தவர் மனம் புண்படாத படி சிரிப்பூட்டுவார். உருவங்களை கிண்டலடிப்பது, ஊனத்தை காட்டி கிண்டலடிப்பதென்பதெல்லாம் அவரிடம் கிடையாது. இயல்பாக நாம் செய்யும் பணியை வைத்தே சிரிப்பூட்டுவது அவருடைய பாணி. பழைய திரைப்படங்களான சபாபதி, சாரங்கதார, அழகு சதாரம் போன்ற படங்களிலிருந்து நகைச்சுவை துணுக்குகளை நம்மோடு பகிர்ந்து கொள்வார். 

வைராக்கியம்: இது திரு. நாகராஜனுக்கே உடைய சிறப்புக் குணமாகும். தன்னைப்பற்றி தவறாகவோ அல்லது அவதூறாகவோ யாரேனும் கூறி விட்டால் அவர்களுடன் உறவை முறித்துக்கொள்வார். நாம் செய்யாத தவறுகளுக்கு நாம் பொறுப்பேற்க முடியாது. நம்முடைய எளிமையை, நம்பிக்கையை, வாழ்க்கைத்தரத்தை பற்றி விமரிசிக்க யாருக்கும் உரிமை இல்லை. அத்தகையவர் நம்முடைய உயர் அதிகாரிகளானாலும் அவர்களுடன் எந்த ஒரு உறவும் வைத்துக்கொள்ள கூடாது என்று கூறுவார். 

இப்படித்தான் ஒரு முறை இவர் படிக்கும் காலத்தில் வேலூரில் தமது மாமா வீட்டில் தங்கியிருந்தார். ஒருநாள் எதேச்சியாக மாமா-மாமி பேச்சு இவர் காதில் விழுந்தது. அவர்கள் இவரது தந்தையாரின் சிறு வருமானம் பற்றி பேசி எள்ளி நகையாடிக்கொண்டிருந்தார்கள். உடனே கோபம் கொண்ட நாகராஜன், மாமாவிடம் இனி இந்த வீட்டில் இருக்க முடியாது என்று கூறி வெளியே வாடகை வீட்டில் தங்கி படித்தார். இந்த விஷயம் அறிந்து இவரது அன்னை மாமாவை கடிந்துக்கொண்டதுடன் திரு. நாகராஜனின் செயலையும் பாராட்டினார். மாமா இறக்கும் வரை அவரது வீட்டிற்கு சென்றதில்லை. இவ்வளவு வைராக்கியத்திற்கு இவர் தமது தந்தையாராகிய திரு. மார்க்கபந்துவைதான் உதாரணமாக கூறுவார்.

திரு. மார்க்கபந்துவின் தந்தையாராகிய திரு. சுப்ரமணியனை கொன்று அவரது சொத்துக்களை அபகரிக்க உடன் பிறந்த தம்பியே திட்டம் தீட்டினார். அவர் களத்துமேட்டில் படுத்திருந்த போது இப்படி ஒரு செயலை செய்ய இருந்தார். ஊரில் உள்ள ஒரு பெரியவருக்கு இது தெரிந்து அந்த தம்பி கையும் களவுமாக பிடிபட்டார். அவ்வளவுதான் திரு. சுப்பிரமணியன் தம்பியுடன் இருந்த அத்தனை உறவுகளையும் முரித்துக்கொண்டதோடு அல்லாமல் தமது மகன்களை அழைத்து "நான் இறந்தாலும் அவன் என் உடலை பார்க்காமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு"என்று கூறினார். அவ்வாறே அவர் இறந்த பின்பு அந்த தம்பி காண வந்திருந்தார். அவரை பார்க்க விடாமல் விரட்டி அடித்தார் திரு. மார்க்கபந்து. சிதைக்கு தீமூட்டி சாம்பலாகும் வரை அங்கு காவலிருந்து அவரை அண்ட விடாமல் பார்த்துக்கொண்டார். சாம்பலை பார்த்து கதறி கண்ணீர் விட்டு தன்னை மன்னிக்கும்படி அந்த தம்பி அழுதார் என்பது வேறு கதை. இத்தகைய வைராக்கியத்தோடுதான் நாம் வாழ வேண்டும். அடுத்தவரால் நமக்கு ஆதாயம் என்பதற்காக ஐந்துக்கும், பத்துக்கும் பல்லை இளித்து நம் சுய மரியாதையை இழக்க கூடாது என்பார் திரு. நாகராஜன்.         


திரு. நாகராஜனின் ஆர்வத்திற்குரிய விஷயங்கள் பல இருந்த போதிலும், நாங்கள் அருகிலிருந்து கவனித்தது, அவருடனிருந்தவர்கள்  சொல்லிக்கேட்டதுமான மேலும் சில விஷயங்களையும் இங்கு பகிர்ந்து கொள்வது நலம் என்று எண்ணுகிறோம்.

திரு. நாகராஜன் அவர்களுக்கு பல துறைகளில் ஈடு பாடு இருந்தது. கலை, இலக்கியம், கல்வி, பண்பாடு, ஆன்மிகம், வரலாறு, அரசியல், விளையாட்டு என்று அந்த பட்டியல் நீள்கிறது. அவற்றில் எமக்கு தெரிந்த சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

தமிழார்வம்:           

அவருக்கிருந்த தமிழார்வம் வியக்கத்தக்கது. அவர் கடிதங்கள் மற்றும் கட்டுரைகளை பெரும்பாலும் தமிழிலேயே வரைவார். அவற்றில் தமிழிலேயே, சே.மா. நாகராஜன் என்று கையொப்பமிடுவார். தேவை இருந்தால் மட்டுமே ஆங்கிலத்தில் எழுதுவார். கையெழுத்துக்கள் ஒரே சீராக இருக்கும். இலக்கண மற்றும் இலக்கிய குற்றங்களை காண முடியாது. இரண்டு மூன்று வரிகளடங்கிய வாக்கியங்களை எளிதாகவும் அடுத்தவருக்கு புரியும்படியும் அமைப்பார். இடையிடையே அடித்தல் திருத்தல் என்பது அறவே இருக்காது. பொதுவாக நிகழும் டண்ணகர, றன்னகர குழப்பங்கள் கூட இல்லாமல் எளிதாக எழுதுவார். அவ்விதமே உச்சரிப்பும் இருக்கும். தூயத்தமிழில் எழுதும் அதே வேளையில் காபியை "குழம்பி" என்று எழுதும் அளவுக்கு வறட்டு தமிழார்வலர் அல்ல. இந்தியா முழுமைக்கும் ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். அந்தந்த மாநிலங்கள் அவரவர்கள் மொழியை மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டம் உள்ளவர்.பிழைக்கத்தெரிந்த அளவுக்கு ஹிந்தியை தெரிந்திருக்க வேண்டும். தமிழை மறந்து, தமிழில் பேசினால் பாவம் என்று வளரக்கூடாது. தமிழை வியாபாரமாக வைத்து பிழைப்பு நடத்துவதையும் கண்டித்தார்.

ஔவையாரின் மூதுரை, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்றவற்றை குழந்தைகளுக்கு பாடமாக வைத்து அவர்களை நல்வழி படுத்தவேண்டும். அவை எளிதில் படித்து புரிந்துக்கொள்ள வசதியாக உள்ளன. பலர் பலவரிகளில் கூறியவற்றை திருவள்ளுவர் இரண்டு வரிகளில் கூறியிருக்கிறார். அதையும்  ஒரு வரியில் கூறி சிறப்பித்த பெருமை ஔவையாருக்குண்டு. ஔவையாரில்லாமல் தமிழில்லை, பிள்ளையார் பக்தி இல்லை, திருக்குறளும் இல்லை, என்று அநேக புகழை தன்னகத்தே வைத்த பெண்பாற்புலவரை தெரியாமல் தமிழினம் வளர்ந்துவிடமுடியாது. அப்படி வளர்வதும் நல்லதல்ல.

திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். திருக்குறளை இயற்றியவர் தெய்வப்புலவரகத்தான் இருக்க வேண்டும். இவ்வளவு உண்மைகளை எளிதாக ஈரடியில் சொல்லிவிட சாதாரண மானிடர்களால் முடியாது. இவ்வளவு சீரிய கருத்துக்களை சொன்ன அந்நூல் கால வெள்ளத்தால், கையாண்டவர்களாலும் ஓலைசுவடி விகாரத்தாலும் சில சிதைவுகளை சந்தித்திருக்கலாம் என்பது அவர் எண்ணம். இன்று நாம் காணும் சில குறட்பாக்கள் ஈடுகட்டப்பட்டிருக்கலாம். சில உதாரணங்கள்:

"செயற்கரிய செய்வார் பெரியார் சிரியர் செயற்கரிய செய்கலாதார்" - இந்த குரலில் அரிய செயல்களை பெரியோர் செய்வர் என்ற ஒரு சொற்றோடரிலேயே, சிரியோரால் அத்தகைய செயல்களை செய்ய முடியாது என்ற மறைபொருளும் சொல்லாமலேயே விளங்குகிறது. அதை தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை. அதுவும் பெரியோரின் பெருமையை கூறும் பொழுது அவர்களை உயர்த்திச்சொல்ல ஒரு வரியையே வள்ளுவர் வீனடித்திருக்கமாட்டார். ஆகவே இந்த குறட்பா "சிரியர் செயற்குரிய செய்கலாதார்" என்றே இருந்திருக்க வேண்டும். கீழ்மக்கள் செய்வதற்கு எளிய செயல்களைக்கூட செய்ய இயலாதவர் என்று குறிப்பிடும்பொழுது பெரியோரின் மேன்மை இன்னும் உயர்வாக தொனிக்கின்றதல்லவா. இதைத்தான் வள்ளுவரும் செய்திருப்பார். காலப்போக்கில் அது மாறுபாடு கண்டிருக்கும் என்று விளக்கம் கூறுவார்.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" - நாம் எதை இழந்தாலும் அவை பேரிழப்பாக இருக்காது. அவற்றை பிறகு சம்பாதித்துக்கொள்ள முடியும். அனால் ஒழுக்கத்தை இழந்தால் திரும்ப பெறமுடியாது. அது உயிரினும் மேலானது. அறிவியல் முன்னேற்றத்தின் காரணாமா போகின்ற உயிரையும் திரும்ப கொண்டுவந்துவிடும் வல்லமையை பார்க்கின்றோம். இதய ஓட்டத்தை நிறுத்தி சிகிச்சை செய்யும் அளவுக்கும் நாம் வளர்ந்துவிட்டோம். அனால் ஒழுக்கத்தை இழந்து பின் உயர்வு பெற்ற மனிதர்களை பார்க்க முடியாது. அவை அவர்களது மரணத்திற்கு பின்னரும் அவர்களின் பரம்பரைகளையே அரித்துக்கொண்டிருக்கும். இன்று எட்டப்பன் பரம்பரை என்று யாராவது இருந்தாலும் அவர்களை தங்களை அந்த பரம்பரையினர் என்று கூறி பெருமை பட்டுக்கொள்ள முடியுமா? அத்தகைய இழி செயல்களை செய்த பின்னர் அந்த வம்சமே மேம்படுவது என்பது அரிது.

இது போன்றே கம்பராமாயணத்தில் ஒரு நிகழ்வை பற்றி விரிவாக கூறுவார். பரதன் முடி சூட வேண்டும் என்றும் இராமன் கானகத்திற்கேக வேண்டும் என்று கைகேயி வரம் பெறுகிறாள். தசரதன் மூர்ச்சித்து கீழே விழுந்து விட்டான். இராமனை அழைத்து, அவனுடைய தந்தை, தசரத மகாராஜாவின் ஆணை இது என்று அவனை காட்டிற்கு செல்லும்படி பணிக்கிறாள். என்ன ஏது என்று கேட்காமல்  உடனே இராமன் மனைவியும் இளவலும் பின்தொடர காடு நோக்கி செல்கிறான். அவன் தனது தந்தை என்னவானார், அவருடைய ஆணையாக கைகேயி சொல்கிறாளே? அந்த ஆணையை அவரே நம்மை அழைத்து கூற வேண்டியது தானே? சரி. நாம்தான் புறப்படுகிறோம். இனி அவரை பதினான்கு ஆண்டுகளுக்குப்பிறகுதான் சந்திப்போம். அவரிடம் விடை பெற்றுசெல்லலாமே? இது போன்ற எந்த நினைவும் இராமனுக்கு வரவில்லை. அவன் கைகேயி வார்த்தைகளை சிரமேற்கொண்டு புறப்படுகிறான் என்று தான் கம்பராமாயணம் வருகிறது. நவீன கால மக்களைப்போல "நமக்கு ராஜ்ஜியத்தை தராத தந்தையின் முகத்தில் ஏன் விழிக்க வேண்டும்" என்று இராமன் சென்றுவிட்டானா? ஆனால் இறைவனே மண்ணில் அவதாரம் எடுத்து வந்திருக்கிறான். அவன் தர்மமூர்த்தியாக விளங்குகிறான். இது போன்ற தவறுகளுக்கு அவன் இடம் கொடுப்பானா? பின்பு ஏன் இராமன் தசரதனை சந்திக்காமல் கானகம் சென்று விட்டான்?    

அதற்கும் ஒரு காரணம் இருந்தது. முதல் நாளில் இராமனிடம், நாளை உனக்கு பட்டாபிஷேகம் என்று சொன்னார் தசரதன். இந்த செய்தியை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது கைகேயிதான். தான் பெற்ற மகன் பரதனை விட பன்மடங்கு இராமனை அவள் நேசித்தால். அவன் தன வயிற்றில் பிறக்க வில்லையே என்றார் ஏங்கினாள். அத்தகைய அன்னை மறுநாள், தந்தையின் உத்தரவு இது என்று கூறி கானகம் செல் என்று சொல்கிறாள். இப்போது அவளிடம் "நான் ஏன் தந்தையை பார்த்து விட்டு விடை பெற்று செல்கிறேன்"  என்று இராமன் சொல்வானேயானால் அவன் கைகேயியின் வார்த்தையை நம்பவில்லை என்றுதான் பொருள்படும். தம் மீது பாசம் வைத்துள்ள கைகேயியின் வார்த்தையை நம்பாமல் இருப்பது நெறி பிறழ்ந்த செயலாக போய்விடும். மேலும் தசரதனை சந்திக்கும்பொழுது அவர் புத்திர பாஸாம் மேலோங்கி "கைகேயியின் வார்த்தையை நம்பாதே, இது என் ஆணை நீ இங்கேயே இரு" என்று உத்தரவிட்டு விட்டால்? கொடுத்த வரத்தை மீறியவர் என்ற அவப்பெயர் தமது தந்தைக்கு வந்து விடும், அதோடு தந்தையின் ஆணையைக்கு கட்டுப்படும்போது தாயாகிய கைகேயியின் ஆணையை மீறிய பாவத்திற்கு ஆளாக வேண்டி வரும். மேலும் தமது தந்தைக்கு பிடிக்காத ஒரு செயலை கைகேயி செய்கிறாள் என்பது இராமனுக்கும் தெரிந்து விட்டது என்பதை கைகேயி அறிந்தால் அவள் மனம் மிகவும் வேதனைப்படும். ஆகவே இப்படியொரு தர்மசங்கடத்தை உண்டாக்க வேண்டாம் என்றே அவர் தசரதனை சந்திக்காமலேயே கானகம் சென்றுவிடுகிறார்.

தமிழில் அவருக்கு பிடித்தமானவை, கம்பராமாயணம், திருப்புகழ், கந்தரலங்காரம், திருமுருகாற்றுப்படை, புதுமைப்பித்தன், ராஜாஜி, கல்கி, வாரியார், கி.வா.ஜா. என்று ஒரு நீண்ட பட்டியல் இருந்தாலும் நாங்கள் அறிந்தது சுமார்தான்.

வானவியல்:


வானவியல் பற்றி அவர் அறிந்திருந்தார். நக்ஷத்ரங்களின் இயக்கம், அவற்றின் உதயம், மறைவு மற்றும் கிரகணங்கள் பற்றி விரிவாக அலசுவார். சப்தரிஷி மண்டலம், திரிசங்கு, துருவ நக்ஷத்ரங்கள் போன்றவற்றை அவர் சொல்லித்தான் நாங்கள் அறிந்தோம். ஆறு நக்ஷத்ரங்கள் கூட்டமாக இருக்கும் கிருத்திகை நக்ஷத்ரம், சிவப்பு வண்ணத்தில் இருக்கும் செவ்வாய், போன்றவையும் அவர் சொல்லித்தான் எங்களுக்கு தெரியும். சந்திர, சூரிய கிரகணங்கள் மட்டுமல்லாது, புதன், வெள்ளி, வியாழன் போன்றவற்றால் நிகழும் கிரகனங்களியும் எங்களுக்கு சொல்லியிருக்கிறார்.

வானவியல் சம்பந்தப்பட்ட ஜோதிட சாத்திரத்தையும் சிறிது அறிந்திருந்தார்.  மேலோட்டமாக நாள், நக்ஷத்ரம், திருமண பொருத்தம் போன்றவற்றை பார்ப்பாரே ஒழிய ஆழ்ந்து மூழ்கியதில்லை. அவ்வப்பொழுது ஏற்படும் சந்தேகங்களை திரு. முனிசாமி நாயுடு, ஆசிரியர் அவர்களிடம் கேட்டு போக்கிக்கொள்வார். அவ்வளவே. அதில் தீவிர கவனம் செலுத்தாதற்கு அவர் தந்தையார் திரு. மார்க்கபந்து தடை விதித்ததே காரணம்.  மூத்தப்பெண் பிறந்திருந்த நேரக்குறிப்பை வைத்து அது மாலையோடு (தொப்புள் கோடி கழுத்தை சுற்றி இருத்தல் - அவ்வாறு பிறக்கும் பிள்ளைகளை தந்தையார் சில சாங்கியங்கள் செய்த பிறகே பார்க்கவேண்டும் என்பது மரபு) பிறந்திருக்கும் என்று கணித்தார். சென்று பார்த்த மார்க்கபந்து அவ்விதமே குழந்தை பிறந்துள்ளது என்று கண்டார். அவர் நாகராஜனை ஜோதிட கலையில் கவனம் செலுத்த வேண்டாம். அது நம் குலத்துக்கு ஆகாது என்று தடுத்துவிட்டார்.

அரசியல்:

சுதந்திரப்போராட்ட காலங்கள் ஏற்படுத்திய தாக்கம், பொதுவாக பழைய காங்கிரஸ் தலைவர்களை மட்டுமே தலைவர்களாக கருதி வந்தார். ஊழல், கொள்ளை, நாட்டுப்பற்றின்மை போன்ற செயல்களை புரியும் அரசியல் வாதிகளை வேருத்துவந்தார். சோஷலிச பாதையில் நமது நாடு செல்லும் என்று சுதந்திரம் பெற்றபின்பு நேரு அறிவித்தாலும், சந்தைப்போருலாதாரமே நமக்கு சிறந்தது என்று கருதினார். மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தாங்களே எஜமானர்கள். அவையெல்லாம் அரசாங்கத்தின் பிடியில் இருக்க கூடாது என்று வலியுறுத்துவார். ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாக வாக்குகளை பெறுபவர்களே பெரும்பாலும் இந்தியாவை ஆண்டிருக்கிறார்கள். இந்த முறை மாறி பாதிக்கும் மேல் மக்கள் நம்பிக்கையை பெற்றவர்கள் மட்டுமே ஆலதகுந்த வகை இருக்கவேண்டும். இடைதேர்தல்கள் கூடவே கூடாது. குட்டி குட்டி கட்சிகள் வலுப்பெற்று தேசிய கட்சிகள் வலுவிழப்பது தேச ஒற்றுமைக்கு உலை வைக்கும் செயல் என்ற கருத்து கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட சாராரை எதிர்த்தோ, இனத்தை பழித்தோ மொழி மற்றும் மத உணர்வை தூண்டியோ ஆட்சியை பிடிப்பவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அத்தகைய அமைப்புக்கே வெட்டு வைக்கும் வண்ணம் வலுபெற்றுவிடுவார்கள் என்ற தீர்க்கமான முடிவுடையவர். இந்திராவின் எமர்ஜென்சி கால நிகழ்வுகள், இந்தி எதிர்ப்புகாலங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பரவிய போராட்டங்கள், அத்வானியின் ரத யாத்திரையும், வி.பி. சிங் அரசின் மண்டல் அறிவிப்புகளும் அவருக்கு பிடிக்காதவை. காங்கிரஸ் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாக ராஜாஜி தி.மு.க. உடன் கூட்டணி வைத்ததையும் அவர் ஏற்கவில்லை. ராஜாஜி நேரில் சென்று வேண்டிக்கொண்டும் கருணாநிதி சாராயக்கடைகளை திறந்ததையும், அமெரிக்காகாரன் அணு சோதனைகளை தொடர்ந்து செய்ததையும் கண்டு அவர் மிகுந்த வேதனை பட்டார். ஏனோ தெரியவில்லை, எம்.ஜி. ஆரையும், ஜெயலலிதாவையும் அவருக்குப்பிடித்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு முறை கூட வாக்களித்ததில்லை. சொல்லப்போனால் இரண்டொரு தேர்தல்களில் எவனுக்குமே நான் வாக்களிக்கப்போவதில்லை என்று கூறி ஒதுங்கியுமிருந்தார். 1996 - ல் ஆட்சியை பிடிக்க தமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் திரு. மூப்பனார் நழுவ விட்டதாகவே அவர் நினைத்தார். தேவையில்லாமல் ஏறத்தாழ முடிந்துபோயிருந்த தி.மு. க. விற்கு அவர் வாழ்வளித்ததாக கூறினார்.             

சமூக சிந்தனை: 


ஒவ்வொரு உயிரிலும் இறைவன் குடியிருக்கிறான். நடமாடும் மனிதர்களை இறையுருவாக என்ன வேண்டும். பசியால் வாடும் மனிதர்களை விட்டுவிட்டு ஆலயம்தோறும் நிவேதம் செய்வதால் எந்த பயனுமில்லை என்பது அவர் எண்ணம். ஆகவே அன்னதானம் என்ற உயரிய கோட்பாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனியொரு மனிதனாக செய்ய இயலாத செயல் என்பதால் ஊர் மக்களை ஒன்று திரட்டி வள்ளிமலையில் குடி கொண்டிருக்கும் குமாரக்கடவுளுக்கு பங்குனி விசாகம்தோறும் பஞ்சமிருத அபிஷேகம் செய்வித்து அங்கு வரும் எண்ணற்ற பக்த கோடிகளுக்கு மதிய உணவு வழங்கும் நற்பணியை செய்து வந்தார். 'பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு இல்லை என்று சொல்லுவது தவறு' என்று எங்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார். திரு. எம்.ஜி. ஆர். அவர்கள் சத்துணவு திட்டத்தை அறிமுகபடுத்தியபோது அதை வாயார புகழ்ந்தார். எம்.ஜி.ஆர் மறைந்து பல்லாண்டாகியும் மக்கள் மனதில் அவர் நீங்க இடம் பெற்றிருப்பது அந்த அன்னதானத்தினால்தானோ!

உணவுக்கடுத்தபடி கல்வியை மிகவும் போற்றினார். கல்லாத வீடு இருண்ட வீடு என்பது அவர் கொள்கை. ஊர் மக்களை குறிப்பாக இளைஞர்களை படித்து நல்ல நிலைக்கு வரும்படி அறிவுறுத்துவார். ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகளையும் அவற்றை பெரும் வகைகளையும் அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்.

அவர் எடுத்துக்கொண்ட பெருமுயர்ச்சியால் சேர்க்காடு கிராமத்திற்கு அரசு பேருந்து வசதி செய்து தரப்பட்டது. மக்களை ஒன்று திரட்டி போக்குவரத்து செயலாளர் முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் வரை சந்தித்து போராட்டங்கள் நடத்தி பேருந்தை கொண்டு வந்ததில் அவர் பெரும் பங்கு வகித்தார். பேருந்து இயக்கப்பட்ட பின்னரும் ஏற்பட்ட பல நெருக்கடிகளையும், இடையூறுகளையும் முறியடித்து இன்றுவரை பேருந்து தடையின்றி இயங்க வழி வகுத்தார். 1978 - லிருந்து அந்த பேருந்து மட்டுமே சேர்காட்டை வேலூர் நகருடன் இணைக்கும் ஒரே போக்குவரத்தாக உள்ளது.

இசையார்வம்: 

அவருக்கு கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் இருந்தது. வானொலியில் அவர் விரும்பி கேட்கும் இரண்டு விஷயங்களில் ஒன்று கர்நாடக இசை, மற்றது செய்திகள். செம்பை, செம்மங்குடி, லால்குடி, அரியக்குடி, மகாராஜபுரம், எம்.எஸ். சீர்காழி, எம்.எல்.வி., பட்டம்மாள், யேசுதாஸ், என்று மிக நீளமான இசை வல்லுனர்களின் பாட்டுக்கச்சேரிகள் என்றால் தவறாமல் ஆஜராகி விடுவார். கூடவே தானும் பாடுவார். ஏறத்தாழ தியாகராஜர் கீர்த்தனைகள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. ஆலாபனை தொடங்கும்போதே இன்ன ராகம், தாளம் என்று கூறிவிடுவார். இந்த பாடலைதான் அவர் பாடப்போகிறார் என்றும் சொல்லி விடுவார். அத்தகைய ஞானம் இருந்தது. வேலூரில் தங்கியிருந்த நாட்களில் டௌன் ஹால் என்று சொல்லப்படும் சங்கீத சபாவில் வாரந்தோறும் நடைபெறும் இசை நிகழ்ச்சியை கேட்டு ரசிக்கத் தவற மாட்டார்.

பிற விஷயங்கள்:

அவருக்கு பல துறைகளில் ஆர்வமிருந்தது. அவை வெறும் ஆர்வம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அவற்றில் பயனுமிருந்தது. சுயநலத்திற்காக அவை ஏற்பட்டதல்ல.

ஆன்மிகம்:

ஆன்மிகம் என்றவுடன் ஏதோ தாடி மீசை வைத்து மரவுரி தரித்து சாமியார் வேடம் போடும் ஆன்மீகமல்ல அவர் விரும்பியது. இறைவனிடம் அசைக்க முடியாத பக்தி பூணவேண்டும். அவன் எந்த வழி நடத்துகிறானோ அவ்வழியில் செவ்வனே செல்ல வேண்டும். அதற்காக சோம்பி கிடப்பதல்ல. நம் சிறு சிறு முயற்சிகளை கைவிடாது முன்னேற வேண்டும் என்று கூறுவார். திருமுருகக்கடவுளிடம் அவருக்கிருந்த ஈடுபாடு சொல்லி புரிந்துகொள்ள முடியாது. அவருடனிருந்து நேரில் பார்த்து தான் சிறிதளவேனும் புரிந்துக்கொள்ள முடியும். அத்தகைய ஆழமான பக்தி பூண்டிருந்தார். எழும்போதும் விழும்போதும் முருகா என்பேன் என்று பாம்பன் சுவாமிகள் கூறினாரே அத்தகைய முருக பக்தியை நாம் கண்டிருக்கிறோம். அவருக்கு ஒரு  தொல்லை வந்தாலோ, காலில் சிறு முள் குத்தினாலோ, அசதியாக பெருமூச்சு விட்டாலோ அவர் வாயிலிருந்து வரும் ஒரே சொல் "முருகா" என்பதுதான். முருகா என்ற அந்த புனிதமான சொல்லைத்தவிர அவர் வாயிலிருந்து வேறு அவசொற்களோ வந்ததில்லை. தன்னைத்தானே நொந்துக்கொள்ளும்போது கூட முருகா என்னை என் இப்படி கஷ்டப்படுத்துகிறாய் என்று அவனிடமே முறையிடுவார்.

சுக்குக்கு உயர்ந்த மருந்தில்லை, சுப்பனுக்கு உயர்ந்த தெய்வமில்லை என்ற பழமொழியை அடிக்கடி நினைவூட்டுவார். வீட்டில் சாலக்கிராமத்திற்கு பூசை என்றாலும் அங்கே சுப்ரமணிய சதநாமாவளியை கட்டாயம் படிப்பார். மாதந்தோறும் அவர் சஷ்டி விரதமிருக்க தவறுவதில்லை. ஆரம்பகாலங்களில் ஒருபோழுதிருன்தவர் பின்பு முழுநாளும் உபவாசமிருந்தார். கந்த சஷ்டியின் ஆறுநாட்களிலும் முழு உபவாசம்தான். அவ்வப்போது தேவைபட்டால் மட்டுமே பால் அல்லது காபியை அருந்துவார். அவருடைய தீவிர முருக பக்தியின் அடையாளமாக அவர் பல அரும்செயல்கள் தம் வாழ்வில் ஏற்பட்டதாக கூறுவார். தமது தாயாரின் பார்வைக்காக செயப்பட்ட அறுவை சிகிச்சி வெற்றிபெற்றது, அலுவல் நிமித்தமாக சந்தித்த இடர்பாடுகள் விலகியது, சுமார் மூன்றுவயது வரையில் நடக்காமல் இருந்த தமது மகள் நடனன்தது போன்ற சிலவற்றை எங்களிடம் பட்டியலிட்டிருக்கிறார். கந்த சஷ்டி கவசம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்றவற்றை தம் வாழ்நாள் முழுவதும் படித்துவந்தார். ஊரில் நடை பெரும் கந்தசஷ்டி விழாவில் மக்களுக்கு புரியும் வண்ணம் பிரசங்கங்களையும் செய்திருக்கிறார்.

வள்ளிமலை இறைவனுக்கு பஞ்சாமிருத அபிஷேகம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் மட்டுமல்லாது முருகன் உறையும் பல ஆலயங்களுக்கு சென்று திருப்பணிகளுக்கு தம்மாலான உதவிகளை செய்து வந்தார். வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள் காட்டிய அர்ரவத்தின் பயனாக திருப்புகழ் பாடல்களை பாடி முருகனை நினைப்பார். அருகில் உள்ள திருத்தணிகை மலை மீது குடிகொண்ட இறைவனுக்கு ஆடிக்காவடி செலுத்தும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். தற்செயலாக ஒரு வருடம் காவடி களவு போனதால் காவடி எடுக்கும் முறையை விட்டுவிட்டார். அதற்குப்பதிலாக டிசம்பர் 31 அன்று நடைபெறும் திருப்படி உற்சவத்தில் பங்குகொண்டார். திருமுருகனின் பல அறிய திருவுருவங்களை கண்டு தரிசித்திருந்தபோதும் சுவாமிமலையில் குடிகொண்டிருக்கும் தகப்பன்சுவாமியை  கண்டபோது மட்டுமே தாம் தன்னிலை மறந்ததாகவும் அத்தகைய அழகிய வசீகர புன்னகையுடன் திருமுருகன் வீற்றிருப்பதாவும் எங்களுக்கு தெரிவித்தார். திருமுருகன் என்ற திருப்பெயரே அழகை நினைவுறுத்தும். அதுவும் அப்பனுக்கே பிரணவ மந்திர உபதேசம் செய்த சிவகுருவின் வடிவழகை என்னவென்று கூறுவது.

திருவண்ணாமலையில் குடி கொண்டிருக்கும் அண்ணாமலையாரை தரிசித்தது தம் வாழ்நாளில் பெரும்பயனாக கருதுவார். அவ்வூரில் பனி செய்த காலங்களில் நாள்தோறும் அண்ணாமலை தரிசனத்தை கண்டதாக நினைவு கூறுவார். ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் போன்ற மகான்களின் சமாதிகளில் தியானமிருந்தது பெரும் பாக்கியம் என்பார். ஆண்டுதோறும் இயன்ற வரையில் திருக்கார்த்திகை திருநாளில் மலைமீது ஏற்றப்படும் திருவிளக்கை காண்பதை தமது பணியாக கொண்டிருந்தார்.இவ்வாறே, அருகிலுள்ள புத்தூர் மலைக்கோயில் முருகனையும் தரிசித்து பேருவகை கொண்டார். கோயில் கட்டி முதல் காவடியை தாம் எடுத்து சென்று சமர்பித்ததாக கூறி பேரானந்தம் கொள்வார்.

சில புகழாளர்கள்:


எந்தை மனம் கவர்ந்த சில புகழாளர்களையும், அறிஞர் பெருமக்களையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். அவர் இவர்களைப்பற்றி நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம்  பெருமையாக நினைத்து சிலாகித்துப்போவார்.

இராஜாஜி:


நவீன இந்திய கண்ட மிகச்சில ராஜதந்திரிகளுள் தலையாயவர். தீர்க்கதரிசி. சுமார் ஐம்பது, நூறாண்டுகளுக்கு நம் மக்கள் நலனை நினைத்து திட்டங்களை வகுத்தவர். தம்மீது அவதூறாக கூறப்படும் விமரிசனங்களை குறித்து சிறிதும் கவலைப்படாமல் தாம் மேற்கொண்ட பணியை செவ்வனே ஆற்றியவர். சாதி, இன பூசல்களுக்குள் தம்மை பிணைத்துக்கொள்ளாதவர். தம்மை சார்ந்தோரே தவறு செய்யுமிடத்து அதை அவர்கள் முகத்துக்கெதிரே நேரடியாக எடுத்துரைக்க தயங்காதவர். இதனாலேயே நேருபெருமகனாருடன் கருத்துவேறுபாடு கொண்டார்.

இத்தகைய மேதாவியின் திறமைகளை நாம் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டோம். அணு ஆயுத ஒழிப்பிற்காக கென்னடியை சந்திக்க மட்டும் அயல்நாடு சென்ற ராஜாஜியின் புகழ் அனைத்து நாடுகளிலும் பரவியிருந்தது. தமிழ் தொண்டு, அரசியல் தொண்டு என்று வாழ்ந்த ராஜாஜி கொள்கைக்கும் அப்பால் பெரியாருடன் தீவிர நட்புகொண்டிருந்தார்.

ஜவஹர்லால் நேரு:


பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து இங்கிலாந்தில் சட்டம் பயின்ற நேரு தம் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழித்த மிகச்சிறந்த சுதந்திர போராட்ட வீரராவார். அன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு வசீகரமான நபராக இருந்த நேரு அவர்களை சுதந்திர போராட்டத்திற்கு கட்டி இழுத்தார். திரு. நாகராஜன் சித்தூரிலிருந்த காலத்தில் சுதந்திர உரையாற்ற வந்த நேருவை சந்தித்ததை பெருமையாக சொல்லுவார். மேடையிலிருந்து நேரு உரையாற்றிவிட்டு காருக்கு செல்லும் வழியில் அவரை அணைத்து கட்டிக்கொண்டதாக சொல்லி சொல்லி மாய்ந்து போவார்.

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி:


கானக்குயில் எம்.எஸ். அம்மையாரின் பாடல்கள் என்றால் அவருக்கு உயிர். தம் இசைக்கச்சேரிகள் மூலமாக வரும் வருவாயை கொண்டு பல அறப்பணிகள் செய்த எம்.எஸ். காஞ்சி மகாசுவாமிகளிடம் பெரும் பக்தி பூண்டிருந்தார். முதன் முதலாக ஐ.நா. சபையில் இந்திய இசையை மணக்க செய்த பெருமைக்குரியவர் எம்.எஸ்.

இவர்களைப்போன்றே காஞ்சி மகாசுவாமிகள், சத்யா சாயிபாபா,    என்.எஸ்.கிருஷ்ணன், முத்துலட்சுமி (நகைச்சுவை நடிகை), சாரங்கபாணி,   ஏ.எஸ். பஞ்சாபகேச ஐயர், சீர்காழி கோவிந்தராஜன், லால்குடி ஜி. ஜெயராமன், ஷோபனா ரவி, ரீனி கன்னா,  கல்கி, ஜஸ்டிஸ் பால், அசாருதீன் (இவரை கருவாடு என்றழைப்பார்), ஸ்ரீகாந்த், பிரதமர் சந்திரசேகர், டி.ஐ.ஜி. தேவாரம், என்று ஒரு நீண்ட பட்டியல் அவரிடமிருந்தது.

அவர் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் இறைவன் திருமீது பாடல்கள் புனைவதில் செலவிட்டார். அவற்றில் எமக்குக்கிடைத்த சிலவற்றை இங்கே தருகிறோம்.


வள்ளிமலை முருகன் மீது பாடியது.
(மெட்டு: மருதமலை மாமணியே)

பாடித்திருப்புகழை பரப்பியது எந்தமலை?
மூதடியார் சச்சிதானந்தன் வாழ்ந்தது எந்தமலை?
நாடிவந்தோற்கு நன்மையெல்லாம் நல்குமலை எந்தமலை?
வேடிச்சி வள்ளியம்மை வாழ்ந்தமலை வள்ளிமலை!

வள்ளிமலை நாயகனே வேலையா!
தெள்ளுதமிழ் காவலனே கந்தையா - ஐயா (வள்ளிமலை)

அறுபடை வீட்டில் அழகுற அமர்ந்து அருளினைச்
சொரியும் ஐயா உனது கருணை என்ன சொல்ல (வள்ளிமலை)

மாசிமகம் நாளில் தேர் கிரிவலம் வந்து
காசினியை காக்கும் கந்தையா (வள்ளிமலை)

சோதனைகள் புரிந்தாலும் சிவகுமரனை நான் மறவேன் - என்
வேதனை களைந்திடவே வேண்டி நிற்பேன்
அஞ்சுதலை அழித்து ஆறுதலை அளித்து
குஞ்சரி மணாளன் காத்திடுவான் (வள்ளிமலை)

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை மறவேன் - நான் மறவேன்
சேலார் வயப்பொழில் செங்கோடனை காண வருவேன் - நான் வருவேன்

பசுபதி திருமகனே - பழனியில் அமர்ந்தவனே
எனதேன்னமேல்லாம் - உனது தொண்டில்
அதற்காற்றளெல்லாம் - உனதருளே
அளித்திடுவாய் தளபதியே
ஆறுமுகனே சரவணனே
பெரிய இப்புவியினில்
அரியது உனதருள்
புரிவது நின் பனி என
அருள்வாய் குகனே வேலையா (வள்ளிமலை)

பெருமாள் மீது பாடியது
(மெட்டு: உள்ளம் உருகுதையா)

எந்தன் மெய் மலர்ந்ததையா - மாதவா!
உந்தன் மலரடி காண்கையிலே - தித்திக்கும்
தேன் சுவையாம் உன் திருநாமம்
தெவிட்டாத அமுதையா மாதவா (எந்தன்)

அன்புக்கரங்களினால் உனையே அணைத்திடத் தோனுதையா
அபயக்கரமளித்து எமை ஆதரித்திடுவாயப்பா (எந்தன்)

துன்பம் அகன்றதையா - உன்னால்
பேரின்பம் மலர்ந்ததையா
பாற்கடல் நாயகனே - எமை
பாலித்திடுவாயப்பா (எந்தன்)

ஏழுத் திருமலையும்  எளியோரை
வாவென்று அழைக்குதையா
கோரும் வரம் கொடுத்து அவர்கள்
குறைதனை தீர்க்குதையா (எந்தன்)

அறவாழி அமரன் ஐயா - நீ
பிறவாழி தீர்ப்பாயப்பா
புழுவாய் பிறக்கினும் புண்ணியா
உன்னடி மறவாதருள்வாயப்பா (எந்தன்)

செந்தூர் முருகன் மீது பாடியது
(மெட்டு: எங்கிருந்தாலும் வாழ்க)
 
சரவண பவனே போற்றி
சங்கரன் மைந்தனே போற்றி
செந்தூர் குமரனே போற்றி
சேவற் கொடியோனே போற்றி

வருவாய் எனவே குறமகள் காத்திருந்தாளே
வந்ததும் வந்தாய் விருத்தனாய் வந்தாய்
விந்தையை புரிந்து வள்ளியை மணந்த
வெற்றி வேலவனே போற்றி (சரவண பவனே)

ஔவைக்கு நாவல் கனி கொடுத்தாயே
அருணகிரிக்கு ஞானக்கண் அளித்தாயே
அறுபடை வீட்டினில் அமர்ந்திருப்பாயே
அமரர் கோனே போற்றி (சரவண பவனே)

வேலவர் மீது பாடியது
(மெட்டு: பாலும் பழமும் கைகளில் ஏந்தி)

வேலும் கொடியும் கைகளில் ஏந்தி
வேடன் மகளை துணையுடன் கொண்டு
ஆடும் மயில் மேல் நீ வருவாயே
அழகா முருகா அருள் புரிவாயே (வேலும்)

சிவனின் மகனாய் அவதரித்தாயே
வேழமுகனுடன் நீ பிறந்தாயே
உந்தன் தந்தைக்கு உபதேசித்தாயே
உண்மை அறிவை எமக்களிப்பாயே (வேலும்)

பழத்துக்காக போட்டியிட்டாயே
தோற்றதாலே வெறுப்புற்றாயே
கோபத்தோடு ஓடிவந்தாயே
தணிகை வந்து தண்மை பெற்றாயே (வேலும்)

உன்னையன்றி வேறொருவர் இங்கு
உற்ற துணையாய் எனக்காருமில்லை
அன்னையோடு நீ வருவாயே
அனைவரையும் காத்தருள்வாயே (வேலும்)


ஆறுமுகர் மீது பாடியது
(மெட்டு: கணபதியே வருவாய்)

அறுமுகனே வருவாய் அருள்வாய்
அறுமுகனே வருவாய்

ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி
தீது புரியாத கலியுக வரதா (அறுமுகனே)

ஆறுமுகங்களும் அணிமுடியாறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவள செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணி சுட்டியுடன் (அறுமுகனே)

கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனிய வேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா (அறுமுகனே)

மால்மருகர் மீது பாடியது    


நம்பிவந்தேன் வள்ளி நாயகனை யான்
தும்பிக்கையான் தம்பி துணையிருப்பான் என்று (நம்பி)

அம்பிகை பாலா ஆறு பொறியினில் உதித்தவா
அமரர் இடர் தீர சமரம் புரிந்தவா - (நம்பி)

படிக்குந்திருப்புகழ் போற்றும் திருமுருகன்
அடியார் திருக்கூட்டம் அவணியில் என்றும்
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்ற
மாலின் மருகன் வரமருள்வான் என்று (நம்பி)

திருப்போரூர் திருமுருகன் மீது பாடியது
(மெட்டு: கற்பகவல்லி நின் பொற்பதங்கள்)

வள்ளியை புல்கின்ற மால்வரை தோள் அண்ணல்
வல்லபமே அருள்வாய் - தெய்வ
கொந்தார் கடம்பு புடை சூழ் திருத்தணிக் குன்றில் நிற்கும்
கந்தா இளம் குமரா அமராவதி காவலனே (வள்ளியை)

அறிவிக்கும் அனாதியாய் ஐந்தொழிலுக்கும்  அப்புறமாய்
அன்றே மன்மதனுக்கெட்டா வடிவாய் தனாதருளின
பஞ்சவித ரூப சுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய்
எஞ்சாத பூரணமாய் நிலை நின்ற திருக்குமரா (வள்ளியை)

நாயேன் உன் சீரடிக்கு அல்லவை செய்தாலும்
பேயேன் இழைத்த பெரும்பிழையை பொறுத்தருள்வதுன் கடன்
போரூரா என்னை ஒறுத்தால் எனக்கார் உறவு இங்கே
திருப்போரூர் கட்டழகா காத்தருள்வதுன் கடனே (வள்ளியை)

பாலுக்குள் வெண்ணையை எழும் பான்மை போல் எனுளத்தின்
சீலத்தை எல்லாம் தெளிவிப்பதெந்நாளோ
வேலுக்கரசே விரல் மாமயிற்கரசே
தாலத்தரசே சமராபுரி காவலனே (வள்ளியை)

ஆறுமுகம் வாழி ஆறிரண்டு தோள் வாழி
இருபதாம் வாழி இரு தேவிமார் வாழி
வீறுபடை வாழி வேல் வாழி மயில் வாழி
போரூர் வாழி சுகவாழி மகிழ்ந்து (வள்ளியை)

திருத்தணி முருகன் மீது பாடியது
(மெட்டு: திருப்பதி மலை வாசா வெங்கடேசா)

திருத்தணி மலை வாசா குமரேசா
திருவுளம் அருளுமையா சர்வேசா

வேண்டுமடியார் மனம் வேண்டியதை அருளும்
வித்தகனே ஞான தத்துவனே கந்தா (திருத்தணி)

வள்ளி தெய்வானை பூசிக்கும் மலர்பாதா
வரையென ஓங்கிய பன்னிரு தோளா
துள்ளிய அசுரரை துணிந்த குணாள - தேவர்
துயர்துடைத்து அருளிய தயாளா (திருத்தணி)

முருகர் மீது பாடியது
(மெட்டு: மாரியை பொழிபவள் மாரியம்மா)

வாரி வழங்குவதில் வள்ளலடி பாரினில்
கந்தனை போல் தெய்வம் இல்லையடி (வாரி)

தன்மனக்கவலை எல்லாம் தீர்த்தருள்வான்
தான் நினைத்ததெல்லாம் அன்றே தருவான் ஐயன் (வாரி)

சரவண பொய்கையிலே உதித்தவனாம் தந்தைக்கு
பிரணவத்தின் பொருளை உரைத்தவனாம்
ஆவினன் குடியில் தவம் இருப்பவனாம்
செந்தூரில் சூரனை அழித்தவனாம் ஐயன் (வாரி)

தென்பரங்குன்றில்  தேவியை மனந்தவனாம்
தேன்மொழி வள்ளியை கவர்ந்தவனாம்
தணிகையில் மூவருமாய் குடி புகுந்தவனாம்
தாரணியை காத்து வருபவனாம் கந்தன் (வாரி)

வெங்கடரமணர் மீது பாடியது
(மெட்டு: அறுபடை வீடு கொண்ட திருமுருகா)

ஏழுமலை நாயகனே வெங்கடேசா
ஏழை எங்கள் மீதிரங்கி கடைக்கண் பாரய்யா (ஏழுமலை)

கோரும் வரம் குறைவின்றி அளிப்பவனே
தீரும் எம் வினை என்று உம்மை நாடி வந்தோம் (ஏழுமலை)


தான் என்ற மதம் கொண்ட மாவலியை 
மூவடி மண் கேட்டு திகைக்க வைத்து 
ஈரடியாய் விண்ணும் மண்ணும் அளந்து 
மூவடிக்கு அவன் சிரம் கொண்ட வாமனனே (ஏழுமலை)


தாய் தந்தையர் ஆணை சிரமேந்தி
தனயன் பரதனுக்காக முடி துறந்து
தவக்கோலம் பூண்டு அன்னை ஜானகியுடன்
தயக்கமின்றி கானகம் விரைந்தோனே (ஏழுமலை)


போர்க்களத்தில் பார்த்தன் சோர்வு பெற 
கார்முகிலோன் தன சுயவுருவெடுத்து
பாரினில் இயக்கம் தானேயென விளக்கி 
விஜயனுக்காய் கீதை விண்டுரைத்தவனே (ஏழுமலை)


பாரோர் புகழும் ஏழுமலை நடுவே
காரிருள் போக்கும் பேரொளியாய்
தீராத வினை தீர்க்கும் பெருமானாய்
திருவருள் பொங்கும் கல்கி அவதாரா (ஏழுமலை)        
 
திரு. நாகராஜனுக்கு பிடித்த சில பக்தி பாடல்களை இங்கே காணவும்:

கந்தர் அநுபூதி - 1. கந்தர் அநுபூதி - 2 கந்தர் அநுபூதி - 3.
கந்தர் அலங்காரம் - 1 கந்தர் அலங்காரம் - 2 கந்த சஷ்டி கவசம்
திருப்புகழ் - 1 திருப்புகழ் - 2 தேவாரம் சிவபுராணம் 
மகிஷாசுர மர்தினி ஸ்தோத்ரம்  தியாகராஜ கீர்த்தனைகள் - பஞ்சரத்ன க்ருதி
எம் எஸ் சுப்புலட்சுமி பாட்டு


Monday, September 12, 2011

பிராணனுக்கு நீர் மிக அவசியம்!

சமீபத்தில் திருப்பதி சென்றிருந்தேன். மலையேறி செல்லுகையில் ஒரு சிறுமி, சுமார் 10 வயதிருக்கும், தமது தந்தையாரிடம் தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டாள். அந்த தந்தையார், இப்பொழுது வியர்த்து கொட்டுகிறது, வியர்வை வருவது நிற்கின்றபோதுதான் தண்ணீர் குடிக்க வேண்டும், தொடர்ந்து நட! என்று அழைத்து சென்றார். இதை கேட்ட எனக்கு என்னவோ போலாகிவிட்டது. குழந்தை தண்ணீர் தாகம் என்று கேட்டும் தண்ணீர் தர மறுத்தது மற்றும் வியர்வை வருவது நின்றபிறகுதான் குடிக்க வேண்டும் என்று தீர்மானித்தது இரண்டும் தவறு.

இப்படி வியர்வை சிந்த பணி செய்கிறவர்கள் தாகமேடுக்கும்போது தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும். வியர்வை சிந்துவது நின்றபிறகு குடிக்கலாமென்பது நீர் வெளியேற்றத்தில் (dehydration) கொண்டுபோய் விடும். மூச்சு வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது தண்ணீர் குடிக்க கூடாது. ஓரிரு நிமிடங்கள் ஆசுவாச படுத்துக்கொண்டு மூச்சு பழையபடிக்கு நிலையாக வந்தபின்பு குடிப்பது நலம். இல்லையென்றால் மூச்சுக்குழலில் நீர் செல்லும் ஆபத்து உண்டாகும். 

நம்முடைய உடலுக்கு என்ன தேவை என்பதை இயற்கை தானாகவே கவனித்துக்கொள்ளும். நாம் அதி சிறந்த மேதாவி தனத்தை அங்கே காட்ட வேண்டியது இல்லை. தண்ணீர் தேவை என்றால் தாகமெடுக்கும், உணவு தேவைக்கு பசியெடுக்கும், மூச்சுக்குழல் அடைப்பை போக்க தும்மல் வரும், கண்ணில் விழுந்து விட்ட புறப்பொருட்களை போக்க கண்ணீர் வரும், உணவில் கலந்துவிட்ட விஷத்தை வெளியேற்ற வாந்தி வரும். இது போன்ற எண்ணற்ற செயல்களை அதுதானாகவே தீர்மானித்துக்கொள்ளும். நாம் சுத்தமான பொருட்களை அதற்கு தயாரித்து கொடுத்தால் போதுமானது. தூய தண்ணீர் தாகமெடுக்கும்போதெல்லாம்  தந்தால் போதும். ஒருசிலர் கூறுவது போல் ஒருநாளைக்கு இத்தனை லிட்டர் என்று எந்த ஒரு கணக்கும் இல்லை. தவிர, தண்ணீர் அமிலத்தன்மை கொண்டது. உடல் வேண்டாத பொழுது, அதாவது தாகமில்லாத பொழுது, தண்ணீர் தருவது தீமையில் முடியும். விரைவில் உணவு செரித்துவிடும், அமிலத்தன்மை அதிகமாவதால் வாயுத்தொல்லை ஏற்படும், உடலில் உள்ள உப்புக்களை உடனடியாக வெளியேற்றி உடலுக்கு உரிய வலிமையை குறைத்துவிடும். இது போன்ற எண்ணற்ற விளைவுகளை வேண்டாத நீர் கொடுத்துவிடும்.

அதிக வேலையோ, மலை அல்லது மாடிகளில் ஏறுவதோ செய்யும்போது மூச்சுக்காற்று அதிகம் வாங்கும். இந்த உஷ்ண காற்று படுவதால் தொண்டை வறண்டு விடும். இதை தவிர்க்க ஈரப்பதம் ஏற்படுமளவிற்கு நீரை உட்கொள்ளலாம். மற்றபடி தாகமின்றி நீரை உட்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். நாமனைவரும் உணவு உட்கொள்ளும் சமயங்களில் நீரை அதிகம் அருந்துவோம். இதுவும் தவறு. ஆரம்பத்தில் ஒரு விழுங்கு, கடைசியில் ஓரிரு விழுங்குகள் இடையிடையே அடைப்பை போக்க சிறிது என்று நீரை குறைவாக உட்கொள்ள வேண்டும். உணவு உண்டு முடித்த ஒரு மணிநேரம் கழித்து வேண்டுமளவிற்கு நீரை உட்கொண்டால் வாயுதொல்லையை தவிர்க்கலாம்.